வாக்கு சதவிகித விவகாரம்; தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
|பதிவான வாக்குகள் கொண்ட 17சி படிவத்தை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன. ஆறாவது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற இருக்கிறது.
ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையிலும் தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு சதவீதத்தை தெரிவிக்க இரண்டு முதல் மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டது. முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்து நான்கு நாட்களுக்கு பிறகுதான் அதிகாரப்பூர்வமாக வாக்குப்பதிவு எவ்வளவு எனத் தெரியவந்தது.
இதனால் 48 மணி நேரத்திற்குள் பூத் வாரியாக அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவை அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என என்.ஜி.ஓ. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
அதில், ஒவ்வொரு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடையும் போதும், நிறைவடைந்து 48 மணி நேரத்திற்குள் வாக்குப்பதிவு சதவீதத்தை துல்லியமாக தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது எனும் 17சி படிவத்தை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டு விடுமுறை கால அமர்வில் நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்த்ரா சர்மா கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணைய தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் கூறுகையில், "இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது. ஏனென்றால், ஒவ்வொரு முறையும் இப்படியான சந்தேகங்களை தேர்தல் ஆணையத்தின் மீது எழுப்பும்போது, மக்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை சிதைவதை பார்க்கிறோம்.
இந்த மக்களவை தேர்தலில்கூட வாக்கு சதவீதம் குறைவதற்கு இந்த மாதிரியான மனுக்கள் மிக முக்கிய காரணமாக அமைகின்றன. இந்த மாதிரியான மனுக்கள் பொதுமக்கள் மத்தியில் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பதில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் மக்கள் வாக்குசாவடிகளுக்கு வருவதற்கு தயங்குகிறார்கள்."என்றார்.
பின்னர், இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், "ஏற்கனவே தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டதால், நாங்கள் அதில் தலையிடமுடியாது. முக்கியமான ரிட் மனுவுடன் இந்த மனு சேர்ந்து விசாரிக்கப்படும். தற்போது தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும்போது நீதித்துறை அதில் தலையிட்டு உத்தரவு பிறப்பித்தால் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் செயல்முறையை பாதிக்கும். எனவே பதிவான வாக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட 17சி படிவத்தை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என தெரிவித்தனர்.