வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு சுவாச பரிசோதனை கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
|மதுபோதையில் இருக்கும் வாக்காளர் ஓட்டு போடுவதற்கு அனுமதிக்கக்கூடாது என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
புதுடெல்லி:
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசாரம் களைகட்டி உள்ளது. தேர்தல் விதிமீறல்களை கண்டறிவதற்காக தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். மக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாக்காளர்கள் குடிபோதையில் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிப்பதை தடுக்கவேண்டும் என ஆந்திராவைச் சேர்ந்த ஜனவாகினி கட்சி வலியுறுத்தி வந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இதற்காக சுவாச பரிசோதனை கருவி வைத்து சோதனை செய்து, குடிபோதையில் இல்லாத வாக்காளர்களை மட்டுமே ஓட்டு போட அனுமதிக்கும்படி கூறியது. ஆனால் தேர்தல் ஆணையம் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து ஆந்திர ஐகோர்ட்டில் ஜனவாகினி கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஐகோர்ட் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஜனவாகினி கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மதுபோதையில் இருக்கும் வாக்காளர் ஓட்டு போடுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்றார்.
ஆனால் அவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஆந்திர ஐகோர்ட்டு உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். இது விளம்பர நோக்கத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என்று கூறினர்.
"தேர்தல் நாளில் மது விற்பனை இருக்காது. அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அப்படி இருக்கையில் இதுபோன்ற வழக்கை விசாரணைக்கு ஏற்க மாட்டோம்" என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.