தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4.5 கோடி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
|தாம்பரம் ரெயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் வைத்திருப்போர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் காரிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய அதிரடி சோதனையில் ரூபாய் 4 கோடி அளவிலான பணம் கட்டுக்கட்டாக சிக்கியுள்ளது. தாம்பரம் ரெயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 6 பைகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.