< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: வருமான வரித்துறை விசாரணைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை
நாடாளுமன்ற தேர்தல்-2024

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: வருமான வரித்துறை விசாரணைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை

தினத்தந்தி
|
7 April 2024 11:42 AM IST

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை,

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8.10 மணிக்கு வழக்கம்போல் எழும்பூரில் இருந்து புறப்பட்டது. அந்த ரெயிலில் அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் தேர்தல் செலவிற்கான பணம் கொண்டு செல்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து, இரவு 8.35 மணியளவில் எழும்பூரில் இருந்து தாம்பரத்திற்கு ரெயில் வந்தபோது அதில் ஏறிய தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 3 பயணிகள் சூட்கேஸ்களில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பின்னர், அந்த 3 பேரையும் உடனடியாக பணத்துடன் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும், பணத்தை எண்ணியபோது அதில் 3 கோடியே 99 லட்ச ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், பணத்துடன் பிடிபட்டது நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய உறவினர் உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது.

நெல்லை எக்ஸ்பிரசில் பணத்துடன் பிடிபட்டது புரசைவாக்கம் தனியார் விடுதி பா.ஜ.க. உறுப்பினர் சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி டிரைவர் பெருமாள் என்பது தெரியவந்தது. நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நெல்லையில் பணப்பட்டுவாடா செய்ய பணம் எடுத்து சென்றதாக பிடிபட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தேர்தல் நேரத்தில் ரூ.10 லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரித்துறையினர்தான் விசாரணை செய்வார்கள். பறிமுதல் தொடர்பான அனைத்து தகவலும் வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.; அவர்கள் உரிய விசாரணை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்