பெங்களூருவில் ரூ.1 கோடி பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் சிக்கியது
|பெங்களூருவில் தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில் ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், பெங்களூருவில் தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில் ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரூ தெற்கு தொகுதிக்குட்பட்ட ஜெயநகர் பகுதியில் கட்டு கட்டாக ரூ.1 கோடிக்கும் அதிகமான பணத்தை இரு சக்கர வாகனத்திலிருந்து நான்கு சக்கர வாகனத்திற்கு மாற்றும்போது, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரு தெற்கு தொகுதியில் பா.ஜ.க. தரப்பில் தேஜஸ்வி சூர்யா மற்றும் காங்கிரஸ் தரப்பில் கர்நாடக மந்திரியின் மகள் சவுமியா போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.