'ஏழை மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்' - தேர்தல் அறிக்கை வெளியிட்ட ராஷ்ட்ரீய ஜனதாதளம்
|இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு 1 கோடி அரசு வேலை வழங்கப்படும் என்று ராஷ்ட்ரீய ஜனதாதள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட்னா,
பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது. இந்த தேர்தலுக்காக கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு வாக்குறுதிகளை அந்த கட்சி வழங்கி இருக்கிறது.
கட்சியின் தலைவரும், மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
அதில், "மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு 1 கோடி வேலைவாய்ப்புகளை ராஷ்ட்ரீய ஜனதாதளம் உறுதி செய்யும்.
வருகிற சுதந்திர தினம் முதல் இதற்கான நடைமுறைகள் தொடங்கும். வேலையில்லா திண்டாட்டத்தில் இருந்து கிடைக்கும் விடுதலையாக அது இருக்கும். வேலையில்லா திண்டாட்டம் எங்களது மிகப்பெரிய எதிரி ஆகும். ஆனால் பா.ஜனதா தலைவர்கள் இதைப்பற்றி பேசுவது இல்லை. அவர்களது 2 கோடி வேலைவாய்ப்பு வாக்குறுதி நிைறவேற்றப்படவில்லை. ஆனால் நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
இந்த ஆண்டு ரக்ஷாபந்தன் பண்டிகையின்போது, ஏழை குடும்பங்களை சேர்ந்த எங்கள் சகோதரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் திட்டத்தை தொடங்குவோம்.
பீகாரில் சிறந்த இணைப்பு வசதிகளை உருவாக்கும் வகையில், 5 புதிய விமான நிலையங்கள் கட்டப்படும். மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக ரூ.1.60 லட்சம் கோடி திட்டம் உருவாக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும். மாநிலத்தில் மக்களுக்கு மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
முப்படைகளில் அக்னிவீரர்கள் திட்டத்தை ரத்துசெய்வோம். தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.