காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் தொண்டர்கள் இடையே மோதல்
|ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
ஜார்கண்ட்,
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 மக்களவை தொகுதிகளுக்கு மே 13 தொடங்கி ஜூன் 1-ந் தேதி வரை 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இங்கு இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிடுகிறது.
அந்த வகையில் ஜார்கண்டின் சத்ரா மக்களவை தொகுதியின் வேட்பாளராக கட்சியின் மூத்த தலைவராக கே.என். திரிபாதியை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. இதற்கு இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றி மோதலாக வெடித்தது. இருதரப்பினரும் நாற்காலிகளை தூக்கி எறிந்து ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் சிலர் காயம் அடைந்தனர்.