தமிழகத்தில் வேட்பு மனு பரிசீலனை - 569 மனுக்கள் நிராகரிப்பு
|தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் 238 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,741 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து நேற்றைய தினம் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது.
இந்த தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் 238 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,741 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் இதுவரை 933 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், 569 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது.
சில இடங்களில் பிரபலமான வேட்பாளர்களின் வேட்பு மனுக்களில் தவறுகள் இருந்ததாக சுட்டிக் காட்டப்பட்டு, அந்த தவறுகள் திருத்தப்பட்ட பின்னர் மனுக்கள் ஏற்கப்பட்டன. ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்த நிலையில், அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 22 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதில் 13 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை வரை அவகாசம் உள்ள நிலையில், நாளை மாலைக்குள் தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.