< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
ரூ.55 ஆயிரம் கையிருப்பு; ராகுல் காந்தியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
நாடாளுமன்ற தேர்தல்-2024

ரூ.55 ஆயிரம் கையிருப்பு; ராகுல் காந்தியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?

தினத்தந்தி
|
4 April 2024 10:32 AM IST

ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஆனி ராஜாவுக்கு மொத்தம் ரூ.72 லட்சம் மதிப்பிலான சொத்துகள் உள்ளன.

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் நடைபெறவுள்ள 2-வது கட்ட தேர்தலின்போது, 20 மக்களவை தொகுதிகளை கொண்ட கேரளாவில் 26-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி அமோக வெற்றி பெற்றார்.

இந்நிலையில், வயநாடு தொகுதியில் மீண்டும் அவர் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆனி ராஜாவும், பா.ஜ.க. சார்பில் அதன் மாநில தலைவர் கே.சுரேந்திரனும் போட்டியிடுகின்றனர். கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நேற்று வயநாடு தொகுதிக்கு சென்றார். காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்காவுடன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்துக்கு வந்தடைந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் வயநாடு தொகுதிக்குட்பட்ட மூப்பநாடு பகுதிக்கு சென்றார்.

அவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் கார் மூலம் கலபெட்டா புதிய பஸ் நிலையத்துக்கு சென்று, திறந்த வாகனத்தில் நின்றபடி பேரணியாக சென்றார். அதன்பிறகு, கார் மூலம் ராகுல்காந்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று, தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட கலெக்டர் ரேணு ராஜியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, பிரியங்கா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர்.

இதேபோல் வயநாடு தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஆனி ராஜாவும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனுவுடன் அளித்த பிரமாண பத்திரத்தின்படி, அவருடைய சொத்து மதிப்பு விவரங்கள் தெரிய வந்துள்ளன.

இதன்படி, அவர் பங்கு சந்தை வர்த்தகத்தில் ரூ.4.3 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளார். மியூச்சுவல் பண்டில் ரூ.3.81 கோடிக்கு வைப்புநிதியாக வைத்துள்ளார். வங்கி கணக்கில் ரூ.26.25 லட்சம் உள்ளது. ரூ.55 ஆயிரம் கையிருப்பில் உள்ளது. 2022-23 நிதியாண்டில் மொத்தம் ரூ.1.02 கோடி வருவாய் கிடைத்துள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.

அவரிடம், மொத்தம் ரூ.9.24 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன. இதில் ரூ.15.2 லட்சம் மதிப்பிலான தங்க பத்திரங்கள் அடங்கும். தேசிய சேமிப்பு திட்டங்கள், அஞ்சலக சேமிப்புகள், காப்பீட்டு திட்டங்கள் மற்றும் பிற சேமிப்புகளில் மொத்தம் ரூ.61.52 லட்சம் அவருக்கு உள்ளன.

ஆண்டுக்கு ரூ.1 கோடி வருவாயுடன் மொத்தம் ரூ.20 கோடி சொத்து உள்ளது. இவற்றில், டெல்லியின் மெஹ்ராலி பகுதியில் உள்ள விவசாய நிலம், குருகிராமில் அலுவலகம் என ரூ.11 கோடி மதிப்பிலான அசையா சொத்தும் உள்ளது. விவசாய நிலத்திற்கு பிரியங்கா காந்தி இணை உரிமையாளராகவும் உள்ளார்.

ராகுல் காந்திக்கு எதிராக 18 எப்.ஐ.ஆர்.கள் விசாரணைக்காக உள்ளன. 2019-ம் ஆண்டில் அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.15.89 கோடியாக இருந்தது. ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஆனி ராஜாவுக்கு மொத்தம் ரூ.72 லட்சம் மதிப்பிலான சொத்துகள் உள்ளன.

மேலும் செய்திகள்