மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
|மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் 30-ந்தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இம்பால்,
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்ளிட்ட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 26) வாக்குப்பதிவு நடைபெற்றது.
மணிப்பூரில் சுமார் 82 சதவீதம் பேர் வாக்களித்தனர். இந்த நிலையில் மணிப்பூரின் வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து, 6 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ருல், ஷங்ஷாக், சிங்காய், கரோங்க, ஒயினாம் உள்ளிட்ட 6 வாக்குச்சாவடிகளில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த 6 வாக்குச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இந்த 6 வாக்குச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று மணிப்பூர் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் ஜா தெரிவித்து உள்ளார்.
முன்னதாக, கடந்த 19-ந்தேதி நடைபெற்ற நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலின்போது, மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிப்பு மற்றும் வாக்குச்சாவடி கைப்பற்றப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து 11 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.