< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க பா.ஜ.க. அனுமதிக்காது - ஜே.பி.நட்டா
நாடாளுமன்ற தேர்தல்-2024

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க பா.ஜ.க. அனுமதிக்காது - ஜே.பி.நட்டா

தினத்தந்தி
|
27 May 2024 3:24 PM IST

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க பா.ஜ.க. அனுமதிக்காது என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

லக்னோ,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 49 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி 5ம் கட்ட தேர்தலும், 58 தொகுதிகளுக்கு கடந்த 25ம் தேதி 6ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

6 கட்ட தேர்தலில் ஒட்டுமொத்தமாக 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் எஞ்சிய 57 தொகுதிகளுக்கு இறுதிகட்டமான 7ம் கட்ட தேர்தல் வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது.

உத்தரபிரதேசம் (13 தொகுதிகள்), பஞ்சாப் (13 தொகுதிகள்), மேற்குவங்காளம் (9 தொகுதிகள்), பீகார் (8 தொகுதிகள்), ஒடிசா (6 தொகுதிகள்), இமாச்சலபிரதேசம் (4 தொகுதிகள்), ஜார்க்கண்ட் (3 தொகுதிகள்), சண்டிகரில் 1 தொகுதி என மொத்தம் 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இறுதிகட்ட தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசியதாவது,

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று அரசியலமைப்பு சாசனத்தில் தெளிவாக உள்ளது. ஆனால், மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் ஆட்சியில் இருக்கும்வரை மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்கமாட்டோம். தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை யாரும் ஆக்கிரமிக்க நாங்கள் விடமாட்டோம். வரும் 4ம் தேதி (வாக்கு எண்ணிக்கை நாள்) எதிர்க்கட்சிகளுக்கு என்ன ஆகப்போகிறது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்