'ராஜஸ்தான் பா.ஜ.க.வின் கோட்டை; 25 இடங்களிலும் வெற்றி பெறுவோம்' - முதல்-மந்திரி பஜன்லால் சர்மா
|ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என முதல்-மந்திரி பஜன்லால் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் நேற்றைய தினம் முதற்கட்டமாக 12 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதம் உள்ள 13 தொகுதிகளுக்கு வரும் 26-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நேற்று நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் 57.26 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என அம்மாநில முதல்-மந்திரி பஜன்லால் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-
"முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. இதற்காக ராஜஸ்தான் மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நேற்றைய தேர்தலில் வாக்குப்பதிவு சதவிகிதம் சற்று குறைவாக இருந்தாலும், 12 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பா.ஜ.க.வின் கோட்டை. மக்களிடம் இருந்து கிடைத்து வரும் வரவேற்பை பார்க்கும்போது, ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளிலும் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அடுத்தகட்ட தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா தெரிவித்துள்ளார்.