< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
ரே பரேலி, வயநாடு தொகுதிகளில் ராகுல் காந்தி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
நாடாளுமன்ற தேர்தல்-2024

ரே பரேலி, வயநாடு தொகுதிகளில் ராகுல் காந்தி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

தினத்தந்தி
|
4 Jun 2024 2:50 PM GMT

2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், வயநாடு தொகுதியில் அதிக வாக்குகளை பெற்று ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பி.யான ராகுல் காந்தி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரே பரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த தேர்தலில், இரண்டு இடங்களிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

இதுபற்றி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியின்படி, வயநாடு தொகுதியில் அவர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆனி ராஜாவை 3 லட்சத்து 64 ஆயிரத்து 422 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவர் வெற்றி பெற்றுள்ளார். கேரள பா.ஜ.க. தலைவர் கே. சுரேந்திரன் 1 லட்சத்து 41 ஆயிரத்து 45 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்து உள்ளார்.

இதேபோன்று காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியான ரே பரேலியில், பா.ஜ.க.வின் தினேஷ் பிரதாப் சிங்கை 3 லட்சத்து 89 ஆயிரத்து 341 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தாக்குர் பிரசாத் யாதவ் 21,588 வாக்குகள் பெற்று 3-வது இடம் பெற்றிருக்கிறார்.

வயநாட்டில் தொடர்ந்து 2-வது முறையாக அவர் வெற்றியை பெற்றிருக்கிறார். 2 தொகுதிகளில் அவர் போட்டியிடுவது இது முதன்முறையல்ல. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், அமேதி தொகுதியில் கடுமையான போட்டியை எதிர்கொண்டார்.

இதில், பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி மற்றும் ஜவுளி துறைக்கான மந்திரி ஸ்மிரிதி இரானி அவரை அதிரடியாக வீழ்த்தி வெற்றி பெற்றார். எனினும், வயநாடு தொகுதியில் அதிக வாக்குகளை பெற்று ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.

மேலும் செய்திகள்