ராகுல்காந்தி 12ம் தேதி தமிழகம் வருகை - நெல்லை, கோவையில் பிரசாரம்
|தமிழகத்தில் ராகுல்காந்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தமிழகத்தில் 9 தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரும் 15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்கிறார். சில இடங்களில் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கிறார்.
இதற்கிடையில் தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் தமிழகத்தில் பிரசாரம் செய்ய இருக்கின்றனர்.
இந்நிலையில், ராகுல்காந்தி வரும் 12ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது அவர் கோவை மற்றும் நெல்லை தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் ராகுல்காந்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து இந்த பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.