"ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்" - துரை வைகோ திட்டவட்டம்
|தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்று திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் துரை வைகோ தெரிவித்தார்.
சென்னை,
சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டேன். இந்த பரப்புரையின் போது தி.மு.க.வின் 3 ஆண்டுகால சாதனைகளை பட்டியலிடும் போது மக்களிடம் மிகுந்த வரவேற்பு இருந்தது. மத அரசியல் செய்து மக்களை பிளவுபடுத்துபவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய தேர்தல் பரப்புரையாக இருந்தது. தமிழ்நாடு, புதுச்சேரியில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் 40 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறும். தேர்தல் வெற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாங்கள் அளிக்கும் பரிசாக இருக்கும்.
தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை, இலவச பஸ் பயணம், காலை உணவுத் திட்டம், மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் அனைவரிடமும் சென்றடைந்துள்ளது. இதேபோல, 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக உயர்த்துவது குறித்த அறிவிப்புக்கும் கிராமப்புற பெண்களின் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தீப்பெட்டி சின்னத்தை அனைவரிடத்திலும் எடுத்துச் செல்வதற்கு எளிதாக இருந்தது.
தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்காததால் கிராமத்திலும், நகரத்திலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருப்பதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள். மத்திய பா.ஜனதா அரசின் செயல்பாடுகள் மீதும், பிரதமர் மோடி மீதும் மக்களுக்கு மிகப்பெரிய அதிருப்தி உள்ளது. ம.தி.மு.க. நிர்வாகிகளின் வலிறுத்தலின் காரணமாக தேர்தலில் போட்டியிடுகின்றேன். கடந்த முறை சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று எண்ணிடம் கூறினார்கள். நான் மறுப்பு தெரிவித்தேன். ஆனால், இந்த முறை ஒட்டுமொத்த நிர்வாகிகளும் கேட்டுக்கொண்டதால் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
இதேபோல, இந்தியா கூட்டணி அமைவதற்கு முன்பாகவே பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என தெரிவித்துள்ளேன். எனவே, ம.தி.மு.க.வை பொறுத்தவரை இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான். ஆட்சி மாற்றம் ஏற்படும்போது அவர் தான் பிரதமராக வருவார். இதில் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது. தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.