ராகுல் காந்திக்கு ரூ.20 கோடி சொத்து: வேட்புமனுவில் தகவல்
|நாடாளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
ரேபரேலி,
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனுவுடன் தனது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் தனக்கு ரூ.20 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
ரூ.3 கோடியே 81 லட்சத்து 33 ஆயிரம் 572 மதிப்புள்ள பங்குகள், ரூ.26 லட்சத்து 25 ஆயிரத்து 157 வங்கி இருப்பு, ரூ.15 லட்சத்து 21 ஆயிரத்து 740 தங்கப் பத்திரங்கள் உள்பட ரூ.9 கோடியே 24 லட்சத்து 59 ஆயிரத்து 264 மதிப்புள்ள அசையும் சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய மதிப்பில் ரூ.11 கோடியே 15 லட்சத்து 2 ஆயிரத்து 598 மதிப்புள்ள அசையா சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னிடம் கையிருப்பாக ரூ.55 ஆயிரம் இருப்பதாகவும், ரூ.49 லட்சத்து 79 ஆயிரத்து 184 கடன் இருப்பதாகவும் ராகுல் காந்தி தனது மனுவில் கூறியுள்ளார். கடந்த நிதியாண்டில் (2022-23) அவரது ஆண்டு வருமானம் ரூ.1 கோடியே 2 லட்சத்து 78 ஆயிரத்து 680 என்றும் வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.