< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
அணுகுண்டுக்கு ராகுல்காந்தி பயப்படலாம், பா.ஜ.க. பயப்படாது - அமித்ஷா
நாடாளுமன்ற தேர்தல்-2024

அணுகுண்டுக்கு ராகுல்காந்தி பயப்படலாம், பா.ஜ.க. பயப்படாது - அமித்ஷா

தினத்தந்தி
|
12 May 2024 10:23 AM GMT

அணுகுண்டுக்கு ராகுல்காந்தி பயப்படலாம், பா.ஜ.க. பயப்படாது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

லக்னோ,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.

இதனிடையே, 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 96 தொகுதிகளுக்கு நாளை (13ம் தேதி) 4ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வரும் 20, 25 மற்றும் ஜூன் 1ம் தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரின் பேட்டி சமூகவலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் மணிசங்கர் பேசியதாவது, பாகிஸ்தானும் அணுகுண்டு வைத்துள்ளது. இறையான்மை கொண்ட நாடு என்பதால் பாகிஸ்தானுக்கு இந்தியா மரியாதை கொடுக்கவேண்டும். முட்டாள்தனமான நபர் அங்கு ஆட்சிக்கு வந்து அணுகுண்டை பயன்படுத்தினால் அது நல்லதற்கு அல்ல. இது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்' என்றார். இந்த வீடியோ வைரலான நிலையில் மணிசங்கரின் கருத்தில் உடன்பாடு இல்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் கவுசம்பி தொகுதி பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித்ஷா இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது,

ராகுல்காந்தி அணுகுண்டுக்கு பயப்படவேண்டுமானால் நீங்கள் பயப்பட்டுக்கொள்ளுங்கள், நாங்கள் பயப்படமாட்டோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. நாங்கள் அதை மீட்போம்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்