வயநாடு தொகுதியை தக்கவைப்பாரா, ராகுல் காந்தி..?
|வயநாடு, ரேபரேலி என 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ராகுல்காந்தி எந்த தொகுதியை விட்டுக்கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வயநாடு,
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் களமிறங்கி இருந்தார். இதில் 2 தொகுதிகளிலும் அவர் வெற்றிக்கொடி நாட்டி உள்ளார்.
ஆனால் ஒரு தொகுதியின் உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், இது தொடர்பாக கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, இது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார். எனவே அவர் எந்த தொகுதியை ராஜினாமா செய்வார், எதை தக்க வைப்பார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்திருக்கிறது. ஆனால் 2 முறை வெற்றி பெற்ற வயநாடு தொகுதியை தக்க வைக்க வேண்டும் என அந்த தொகுதியினரிடமும், தென் இந்தியாவிலும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கேரளாவில் கடந்த 2008-ம் ஆண்டு நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையின்போது புதிதாக உருவான தொகுதி, வயநாடு. பசுமையான மலைகள், பல்வேறு கலாசாரங்கள், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், கணிசமான எண்ணிக்கையிலான பழங்குடியினர் என பன்முகத்தன்மை கொண்ட இந்த தொகுதி விவசாயத்தை பெருமளவில் நம்பி இருக்கிறது.
வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் இருந்து தலா 3 சட்டசபை தொகுதிகள் மற்றும் கோழிக்கோடு மாவட்டத்தின் ஒரு தொகுதியை உள்ளடக்கிய இந்த நாடாளுமன்ற தொகுதி கடந்த 2019-ம் ஆண்டு ராகுல் காந்தி களமிறங்கியதன் மூலம் தேசிய கவனம் பெற்றது. அந்த தேர்தலில் 4.31 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்திக்கு இந்த தொகுதி மக்கள் வெற்றியை பரிசளித்தனர்.
இந்த முறையும் 3.64 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் ஆனி ராஜாவை அவர் தோற்கடித்தார். இந்த வெற்றி வித்தியாசம் குறைந்ததற்கு அங்கு இந்த முறை பதிவான வாக்குகள் குறைந்ததும் ஒரு காரணம் ஆகும்.
அந்தவகையில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் 80.31 சதவீத வாக்குகள் தொகுதியில் பதிவான நிலையில், இந்த முறை 73.57 சதவீத ஓட்டுகளே பதிவாகி இருந்தன.
ராகுல் காந்தி வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதி தேசிய அளவில் கவனம் பெற்றது மட்டுமின்றி, தொகுதியில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களையும் பெற்றிருந்தது.
ஆனால் அவர் தொகுதிக்கு அடிக்கடி வரவில்லை என்பதையும், வட இந்தியாவில் போட்டியிட்டால் அந்த தொகுதிக்குத்தான் முக்கியத்துவம் அளிப்பார் என்பதையும் இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டாக வைத்திருந்தன. ஆனாலும் எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை புறந்தள்ளி வயநாடு வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதியாக ராகுல் காந்தியை மீண்டும் தேர்ந்தெடுத்து உள்ளனர்.
வயநாடு தேர்தலுக்குப்பின்னரே ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி களமிறங்குவது உறுதி செய்யப்பட்டது. அப்படியே அங்கும் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
காங்கிரசார் விருப்பம்
காங்கிரஸ் முதல் குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகளான அமேதி, ரேபரேலி வரிசையில் தற்போது வயநாடும் இணைந்து இருக்கிறது. ராகுல் காந்தியை ஏமாற்றாமல் அடுத்தடுத்து 2 முறை எம்.பி.யாக்கி இருக்கிறது.
எனவே இந்த தொகுதியை அவர் தக்க வைக்க வேண்டும் என வயநாடு மக்கள் விரும்புகின்றனர். அதைப்போல ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி பிரதிநிதித்துவம் தென் இந்தியாவில் கட்சிக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும் என தென் மாநிலங்களை சேர்ந்த காங்கிரசாரும் விரும்புகின்றனர்.