பாலிவுட்டை விட்டு விலகலா...? நடிகை கங்கனா ரனாவத் பதில்
|இமாசல பிரதேசத்தில் ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலின்போது, 4 மக்களவை தொகுதிகளுடன் சேர்த்து, 6 சட்டசபை தொகுதிக்கான வாக்கு பதிவும் நடத்தப்படும்.
மாண்டி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதில், இமாசல பிரதேசத்தின் மாண்டி மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக நடிகை கங்கனா ரனாவத் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் இந்த தொகுதியில் தீவிர பிரசார பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இமாசல பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத்திடம், தேர்தலில் போட்டியிடும் நீங்கள், இந்தி திரையுலகை விட்டு விலக போகிறீர்களா? என கேட்கப்பட்டது. அதற்கு அவர், பாலிவுட் திரையுலகை விட்டு என்னால் இப்போது விலக முடியாது.
என்னுடைய பல படங்கள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன என கூறினார். அவர் போட்டியிட கூடிய, வரலாற்று, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொகுதியானது, காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள தொகுதியாகும். இந்த சூழலில் ரனாவத் வெற்றி பெறுவது என்பது ஒரு சவாலாக இருக்கும்.
இமாசல பிரதேசத்தில் ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலின்போது, 4 மக்களவை தொகுதிகளுடன் சேர்த்து, 6 சட்டசபை தொகுதிக்கான வாக்கு பதிவும் நடத்தப்படும். கடந்த 2019-ம் ஆண்டில் 4 மக்களவை தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தது. இந்த சூழலில், வெற்றியை தக்க வைக்கும் நோக்கத்துடன் அக்கட்சி உள்ளது.