வாக்குப்பதிவு நாளில் தாயாரை நினைவு கூர்ந்த பிரதமரின் மூத்த சகோதரர்
|தாயார் சொர்க்கத்தில் இருந்து நரேந்திர மோடியை ஆசீர்வதிப்பார் என சோமாபாய் மோடி தெரிவித்தார்.
காந்திநகர்,
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் 26-ந்தேதியும் நடந்தது. இரு கட்டங்களிலும் 190 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்து உள்ளது.
அடுத்ததாக குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் 3-வது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்தில், காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட ராணிப் பகுதி அருகே நிஷான் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
அதே வாக்குச்சாவடியில் பிரதமர் மோடியின் மூத்த சகோதரர் சோமாபாய் மோடி தனது வாக்கை செலுத்தினார். வாக்குசாவடிக்கு வெளியே சகோதரர்கள் இருவரும் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோமாபாய் மோடி, கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமான தனது தாயார் ஹீராபென் மோடியை நினைவு கூர்ந்தார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு முறை வாக்கு செலுத்த வரும்போதும், காந்திநகரில் உள்ள அவரது தாயார் ஹீராபென் மோடியின் இல்லத்திற்குச் சென்று ஆசி பெறுவார். இந்நிலையில் பிரதமர் மோடியின் சகோதரர் சோமாபாய் மோடி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்கள் தாயர் தற்போது உயிருடன் இல்லை. ஆனால் அவர் சொர்க்கத்தில் இருந்து நரேந்திர மோடிக்கு தனது ஆசிகளை வழங்குவார். இங்குள்ள அனைத்து மக்களும் விரும்புவதைப் போல், நரேந்திர மோடி 3-வது முறை பிரதமராக வர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும் ஆகும்" என்று தெரிவித்தார்.