தமிழகத்தில் பிறக்காத மறத்தமிழன் பிரதமர் மோடி - அண்ணாமலை பேச்சு
|பிரதமர் மோடியை பற்றி தரக்குறைவாக பேசிய ஆ.ராசா நீலகிரியில் டெபாசிட் கூட வாங்கக் கூடாது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை,
மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராணுவ ஹெலிகாப்டர் மூலம், பிரதமர் மோடி கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வந்தடைந்தார். பிரதமர் மோடியை பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த நிலையில் இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பிறக்காத மறத்தமிழன் பிரதமர் மோடி. தமிழின் பெருமையை கும்மிடிப்பூண்டியை விட்டு தாண்டவிடாமல் செய்தது தி.மு.க. தான். ஜனநாயகத்தை பற்றி தி.மு.க.வினர் எங்களுக்கு பாடம் எடுக்கக் கூடாது. இந்தியாவிலேயே மோசமான நாடாளுமன்ற உறுப்பினர் உண்டு என்றால் அது ஆ.ராசா தான். பிரதமர் மோடியை பற்றி தரக்குறைவாக பேசிய ஆ.ராசா நீலகிரியில் டெபாசிட் கூட வாங்கக் கூடாது.
அடுத்த ஏழு நாட்களை பா.ஜ.க.வினர் முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். அடுத்த ஏழு நாட்களை பிரதமருக்காக நாம் அர்ப்பணிப்போம். ஐந்து ஆண்டுகள் நமக்காக பிரதமர் உழைப்பார். மோடியின் வெற்றிக்காக வீடு வீடாக செல்லுங்கள். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.