< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைப்பார் - மத்திய மந்திரி எல்.முருகன்
நாடாளுமன்ற தேர்தல்-2024

பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைப்பார் - மத்திய மந்திரி எல்.முருகன்

தினத்தந்தி
|
15 April 2024 1:01 AM IST

திருக்குறள் கலாசார மைய அறிவிப்பு தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருப்பதாக மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

உலக அரங்கில் எங்கு சென்றாலும் திருக்குறளையும், திருவள்ளூவரையும் பெருமைப்படுத்தி வரும் நமது பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய சீரிய முயற்சியால் 35-க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்கச் செய்துள்ளார். மேலும் பிரான்ஸ் நகரின் செர்ஜியில், திருவள்ளுவருக்கு சிலை வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டு, அதை நிறுவியும் காட்டியவர்.

நமது தமிழ் மொழிக்கு உண்டான அங்கீகாரத்தை எப்போதும் கொடுத்து வரும் பிரதமர் மோடி, மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்ததும் 'திருக்குறளுக்கான உலகளாவிய கலாசார மையம்' அமைக்கப்படும் என்று, தமிழ் புத்தாண்டு தினத்தில் அறிவித்திருப்பது, உலகத் தமிழர்கள் அனைவரையும் பெருமைப்படுத்துவதாக அமைந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது, காசி மற்றும் சவுராஷ்டிரா தமிழ் சங்கங்கள் நிகழ்த்தியது, உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகெங்கும் ஒலிக்கச் செய்தது, என்று தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் அதீத அன்பு வைத்துள்ள நமது பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் 3-வது முறையாக ஆட்சி அமைப்பார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்