பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும்- நடிகர் சரத்குமார் பேச்சு
|உங்கள் குரல்களை நாடாளுமன்றத்தில் உரக்க சொல்லுகின்ற திறமை உள்ள ராதிகாவிற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று நடிகர் சரத்குமார் கூறினார்.
விருதுநகர்,
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க.வேட்பாளராக நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார் அவருக்காக அவரது கணவரும் பிரபல நடிகருமான சரத்குமார் திறந்த வேனில் சென்று திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம், தியாகராஜ காலனி, ஹார்விப்பட்டி,பாண்டியன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து தனது மனைவி ராதிகாவுக்கு தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தல் பாரதப் பிரதமரை தேர்ந்தெடுக்கின்ற தேர்தல். இதுதமிழகத்தில் முதல்-அமைச்சரை தேர்ந்தெடுக்கக்கூடிய சட்டமன்ற தேர்தல் கிடையாது. மத்தியிலே ஒரு சிறந்த ஆட்சிகடந்த 10 ஆண்டுகள் நடந்தது மீண்டும் நல்லாட்சி நரேந்திர மோடியின் தலைமையில் தொடரப்படவேண்டும். தமிழ்நாட்டிற்காக கடந்த 5 வருடத்தில் 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப்பணிகள் நடந்து இருக்கிறது. ஆனால் இதை இந்தியா கூட்டணி மறைத்து தாங்கள் செய்த திட்டமாக அறிவித்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
விருதுநகர் தொகுதியை பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடியால் சுட்டிக்காட்டப்பட்டவர். அண்ணாமலையாரால் சுட்டிக்காட்டப்பட்டவர்தான் வேட்பாளராக களத்தில் ராதிகா சரத்குமார் நிற்கிறார். அவர் படித்தவர் பண்பு உள்ளவர் நிர்வாக திறமை உள்ளவர்.தொழில் ஸ்தாபனத்தை நடத்திக் கொண்டிருப்பவர் அதை தன் மகளிடம் ஒப்படைத்துவிட்டு 100 சதவீதம் நான் மக்களுக்காக சேவை செய்ய வருகிறேன் என்ற உத்தரவாதத்தை தந்த பிறகு இங்கு வேட்பாளராக நிற்கிறார். அதை நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதை ஆய்வு செய்து ஆராய்ந்து உங்கள் குரல்களை நாடாளுமன்றத்தில் உரக்க சொல்லுகின்ற திறமை உள்ள ராதிகா சரத்குமாருக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். அடிமையாகி, போதைக்கு அடிமையாகி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள் போதை கலாச்சாரத்தில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற வேண்டும். இளைஞர்களுக்கு கல்வியும், வேலைக்கு ஏற்ற ஊதியமும் கிடைத்திட 3வது முறையாக பிரதமர் மோடி வர வேண்டும்.அதற்காக தாமரைசின்னத்தில் வாக்களிக்க வேண்டும். வருகின்ற 19-ந்தேதி ஓட்டு போடச் செல்லும்போது ஓட்டு பெட்டியில் (மின்னணு இயந்திரத்தில்) ராதிகா படம் இருக்கும். ராதிகா பெயர் இருக்கும் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.