ஊழல் இல்லா ஆட்சியை பிரதமர் மோடி கொடுத்திருக்கிறார் - பாரிவேந்தர்
|பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்
சென்னை,
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.அந்த வகையில், இன்று திருச்சியில் உள்ள புலிவலம், மூவானூர் பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது பொது மக்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது,
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019-ல் நடைபெற்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக நாடாளுமன்றத்தில் பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன்
எனது தொகுதிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளேன். குறிப்பாக இந்த தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள் இல்லாமல் இருந்தது. அதனால் அரசுப்பள்ளிகளுக்கு 45 வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளேன். எந்தெந்த ஊருக்கு சமுதாய கூடங்கள் கேட்டீர்களா அங்கெல்லாம் சமுதாய கூடங்கள் கட்டி கொடுத்துள்ளேன்.இதேபோல் நியாயவிலை கடைகள், கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளேன். பெரம்பலூர் தொகுதியில் ஏழை மாணவர்களால் உயர்கல்வி பெற முடியாமல் தவித்தனர். அதனால் ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்துவம் , எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை படிக்க வைத்துள்ளேன்.
மீண்டும் என்னை நீங்கள் நாடளுமன்ற உறுப்பிராக தேர்ந்தெடுத்தால் மத்திய அரசு வழங்கும் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி உங்களின் குறைகளை நிவர்த்தி செய்வேன்.கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார். பாஜக ஆட்சியில் எந்த அமைச்சர் மீதும் எந்த ஊழல் குற்றசாட்டும் இல்லை. அந்த வகையில் ஊழல் இல்லா ஆட்சியை மோடி கொடுத்திருக்கிறார்.என தெரிவித்தார்.