< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தி.மு.க.,வின் 3 ஆண்டு ஆட்சியில் விலைவாசி உயர்வு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
நாடாளுமன்ற தேர்தல்-2024

தி.மு.க.,வின் 3 ஆண்டு ஆட்சியில் விலைவாசி உயர்வு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
12 April 2024 6:51 PM IST

அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது, தமிழகம் வளர்ச்சி அடைந்தது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல், திருச்செங்கோட்டில் அ.தி.மு.க வேட்பாளர் தமிழ்மணிக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க.,வின் 3 ஆண்டு ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. அ.தி.மு.க.,வில் 10 ஆண்டுகால ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது, தொழில் செய்வதே கேள்விக்குறியாக உள்ளது. சிமெண்ட் மணல் உள்ளிட்ட கட்டுமானப்பொருட்கள் பன்மடங்கு உயர்ந்துவிட்டது. சாமானியர்கள் வீடு கனவு கானல் நீராகி வருகிறது. கட்டுமான பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் தி.மு.க. சேர்க்கவில்லை.

முன்பு ரூ.60க்கு விற்ற டீசல் தற்போது ரூ.94க்கு விற்கப்படுகிறது. இப்படி ரூ.34 அதிகரித்தால் எப்படி லாரி தொழிலை நடத்த முடியும். டீசல் விலையேற்றத்தால் லாரிகளுக்கான சரக்கு கட்டணம் உயர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளன.

அ.தி.மு.க. ஆட்சியில் டீசல் விலையேற்றத்தை கட்டுக்குள் இருந்தது. தி.மு.க. அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. நாமக்கல் தொகுதியில் லாரி தொழில், ரிங் தொழில் ஆகியவை டீசல் விலையேற்றத்தால் கடுமையாக சரிந்து விட்டது. அ.தி.மு.க. ஆட்சி மக்களின் ஆட்சியாக இருந்தது. தி.மு.க. என்று ஆட்சிக்கு வந்ததோ அன்று முதல் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எந்த ஒரு மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நன்றாக இருக்கிறதோ, அங்கு தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

அ.தி.மு.க. ஆட்சியில் 7 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க.,வின் 3 ஆண்டுகால ஆட்சியில் 58 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சியில் கடந்த 6 மாதத்தில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.15 அதிகரித்துள்ளது. பால், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்துள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் நெசவுத்தொழிலை பாதுகாக்கும் வகையில் இலவச வேட்டி, சேலைகள் ஆர்டர்கள் முறைப்படி கொடுக்கப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நூல்விலையை கட்டுக்குள் வைத்ததால் கைத்தறி தொழில் காப்பாற்றப்பட்டது. விசைத்தறிகளை இயக்காவிட்டாலும் குறிப்பிட்ட மின்கட்டணத்தை கட்ட வேண்டும் என தி.மு.க. அரசு நிர்ணயம் செய்திருக்கிறது.

மரவள்ளி கிழங்கு சாகுபடி, மாவுப்பூச்சி தாக்குததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கவனிக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது. கோழித்தீவனம் உயர்ந்ததால் முட்டை கொள்முதல் விலையும் அதிகரித்து வருகிறது. இதை தி.மு.க. அரசு கட்டுப்படுத்தவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்