17வது மக்களவையை கலைத்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
|கூட்டணி கட்சிகள் ஆதரவு கடிதம் கொடுத்த நிலையில் ஜனாதிபதியை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின. இதனால் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 3-வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது. மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா வருகிற 8-ம் தேதி மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் கூடியது. இதில் 17-வது மக்களவையை கலைக்க அமைச்சரவை பரிந்துரைத்தது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்தார். மக்களவையை கலைக்க அமைச்சரவை பரிந்துரைத்த தீர்மானத்தை அளித்தார். மேலும் தனது பதவி மற்றும் அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் மோடி வழங்கினார்.
இந்நிலையில், அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 17வது மக்களவையை ஜனாதிபதி திரவுபதி முர்மு கலைத்துள்ளார் என ராஷ்டிரபதி பவன் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜனதாவிற்கு தங்களது ஆதரவு கடிதத்தை கூட்டணி கட்சிகள் வழங்கினர். தெலுங்கு தேசம் 16, ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களில் வென்ற நிலையில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கூட்டணி கட்சிகள் ஆதரவு கடிதம் கொடுத்த நிலையில் ஜனாதிபதியை சந்திக்க உள்ளார் பிரதமர் மோடி. ஆட்சி அமைப்பதற்கு இன்றே உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.