மக்களவை தேர்தலில் முன்னிலை வகிக்கும் பிரபல பெண் வேட்பாளர்கள்
|மக்களவை தேர்தலில் பிரபலமான பெண் வேட்பாளர்கள் பலர் கணிசமான வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிப்பதோடு, தங்கள் வெற்றியையும் உறுதி செய்துள்ளனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதே சமயம் 'இந்தியா' கூட்டணி 234 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இந்த மக்களவை தேர்தலில் மொத்தம் 797 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட பிரபலமான பெண் வேட்பாளர்கள் பலர் கணிசமான வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிப்பதோடு, தங்கள் வெற்றியையும் உறுதி செய்துள்ளனர்.
இதன்படி, ஆரியானா மாநிலம் சிர்சா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் செலிஜா, சுமார் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். டெல்லியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட பன்சுரி சுவராஜ், சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் கங்கனா ரனாவத், சுமார் 70 வாக்குகள் முன்னிலை பெற்று தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.
மதுரா தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ஹேமமாலினி, அதே தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் முகேஷ் தன்கரை விட சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். உத்தர பிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் சாமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிட்டார். அவர் பா.ஜ.க. வேட்பாளர் ஜெய்வீர் சிங்கை விட 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
அதே போல் பீகாரின் பாடாலிபுத்ரா தொகுதியில் லாலு பிரசாத் யாதவின் மகள் மிஷா பாரதி, மேற்கு வங்காளத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா ஆகியோர் தங்கள் தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். மராட்டிய மாநிலம் பாராமதி தொகுதியில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுப்ரியா சுலே முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, சுமார் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார்.