மலைக்கிராம வாக்குச்சாவடிக்கு தேர்தல் அலுவலர்கள் மேற்கொள்ளும் திக்..திக்..பயணம் - வீடியோ
|அருணாச்சல பிரதேசம் கடுமையான நிலப்பரப்புகளை கொண்ட மாநிலம் ஆகும்.
இட்டாநகர்,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், 2 மக்களவைத் தொகுதிகளுடன் சேர்த்து 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 2 ஆம் தேதியும், மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதியும் எண்ணப்படுகின்றன.
இதையொட்டி, மாநிலத்தில் 2,226 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 228 மையங்களை தேர்தல் அதிகாரிகள் நடந்து மட்டுமே சென்றடைய முடியும். அந்த அளவிற்கு தேர்தல் அதிகாரிகளுக்கு சவால் நிறைந்த பணி, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. சீன எல்லையொட்டிய அருணாச்சலப் பிரதேசம் கடுமையான நிலப்பரப்புகளைக் கொண்டது.
அதிலும் 61 வாக்குப்பதிவு மையங்களுக்கு 2 நாள்களும், 7 மையங்களுக்கு 3 நாள்களும் கால் நடையாக நடந்து செல்ல வேண்டியிருக்கும். இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் கஷேங் என்ற மலைக்கிராம வாக்குச்சாவடிக்கு அதிகாரிகள் சிரமப்பட்டு பயணிக்கும் வீடியோவை தேர்தல் ஆணையம் பகிர்ந்துள்ளது.