தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது - சத்யபிரத சாகு தகவல்
|உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல் நேற்று தொடங்கியது. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடக்கிறது.
சென்னை,
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 பேரும், குறைவாக நாகப்பட்டினத்தில் 9 பேரும் போட்டியிட்டனர்.
மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் ஓட்டுப்போட தகுதியானவர்கள். சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் மட்டும் 48 லட்சத்து 69 ஆயிரத்து 518 வாக்காளர்கள் உள்ளனர். அனைவரும் வாக்களிக்க வசதியாக தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
சரியாக நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பல வாக்குச்சாவடிகளில் அதற்கு முன்னதாகவே பலர் ஆர்வத்துடன் வாக்களிக்க காத்திருந்தனர். காலை 7 மணி ஆன பிறகு வரிசையாக அவர்கள் உள்ளே அனுப்பப்பட்டு, ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர். வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீட்டருக்கு முன்பே ஓட்டுப்போட வந்தவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அவர்கள் அங்கிருந்து நடந்து வந்து வாக்களித்தனர்.
வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் 2 சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வெளியில் வைக்கப்பட்டு இருந்தன. அவர்களை, தேர்தல் பணியில் இருந்த ஊழியர்கள் வாக்குச்சாவடிக்குள் ஓட்டுப்போட அழைத்து சென்றனர்.
பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்ட 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகளில் 'வெப் கேமரா' பொருத்தப்பட்டதுடன், 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
வாக்குச்சாவடிக்கு முன்பு துணை ராணுவப்படை வீரர்கள் கையில் துப்பாக்கியுடன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த வாக்குச்சாவடிகளை, சென்னை தலைமை செயலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தேர்தல் அதிகாரிகள் கண்காணித்தனர்.
காலையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கினாலும், அதன் பின்னர் மெதுவாகவே வாக்குப்பதிவு நகர்ந்தது. சென்னையில் தொடக்கத்தில் இருந்தே மந்தநிலை காணப்பட்டது. மதியம் 1 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் 40.05 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இளம் வாக்காளர்கள், பல வாக்குச்சாவடிகளில் பொறுமையாக காத்திருந்து, வாக்களித்ததை பார்க்க முடிந்தது.
சென்னை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் பலருடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் பலர் ஆர்வமுடன் ஓட்டுப்போட வந்தும், வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை பார்க்க முடிந்தது.
இதேபோல், தமிழ்நாட்டில் சில இடங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாததால், அவர்களாலும் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டு, அவர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவமும் அரங்கேறியது. இதுமட்டுமல்லாமல், சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், ஓட்டுப்பதிவு அங்கு நடைபெறுவதில் சிறிது சிக்கல் ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் அந்த பழுது நீக்கப்பட்டு மீண்டும் வாக்குபதிவு நடந்தது.
குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 45 இடங்களிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13 இடங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் சிறிது தாமதம் ஏற்பட்டது. பின்னர் பழுது நீக்கப்பட்டு, தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. எங்கெல்லாம் வாக்கு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதோ, அங்கு ஓட்டுப்போட கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
அனல் பறக்கும் வெயிலுக்கு மத்தியிலும் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளை நோக்கி வந்து வாக்களித்து சென்ற வண்ணம் இருந்தனர். பின்னர், வெயிலின் தாக்கம் சற்று குறைந்தபிறகு, மாலையில் வாக்குச்சாவடிகளை நோக்கி அதிகளவில் வாக்காளர்கள் வந்ததை காண முடிந்தது. அதிலும் முதல் முறை வாக்காளர்கள் நேற்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.
காலையில் மெதுவாக வாக்குப்பதிவு தொடங்கினாலும் மாலையில் விறுவிறுப்படைந்தது. பலர் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். சரியாக மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. அதற்கு முன்னதாக வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டு போட வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக கூடுதல் நேரம் வழங்கப்பட்டு, ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இதேபோல் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் உள்ளூர் பிரச்சினைகளுக்காக அந்த பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
வேறு எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும் வகையில், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. வாக்குப்பதிவு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இரவு 7 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்னும் பல வாக்குச்சாவடிகளில் மக்கள் டோக்கன் வாங்கிக்கொண்டு வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். எனவே வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் உயரும்.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67 சதவீதமும், தர்மபுரியில் 75.44 சதவீதமும், சிதம்பரத்தில் 74.87 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
சென்னையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வெயிலை தவிர்க்க மாலை 3 மணிக்கு பிறகு மக்கள் வந்து அதிகமாக வாக்களித்துள்ளனர். மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
இந்த எண்ணிக்கையில் தபால் ஓட்டுகள் சேர்க்கப்படவில்லை. என்றாலும், முழுமையான வாக்குப்பதிவு அளவு நாளை (இன்று) காலை 11 மணிக்கு மேல் தெரிய வரும்.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 7 மணி நிலவரப்படி 69.55 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அப்போது அதிகபட்சமாக தர்மபுரியில் 82.41 சதவீதமும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 57.07 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன.
மறு தேர்தல் நடத்துவது பற்றிய தகவல்கள் நாளைதான் தெரிய வரும். அந்தந்த வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கை தருவார்கள். பின்னர் அதுபற்றி முடிவு செய்யப்படும். மறு தேர்தலுக்கு ஒரு கட்சி மட்டும் கோரிக்கை விடுத்துள்ளது. அதுபற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை பெறப்படும்.
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது மிகவும் சுமுகமாகவும், அமைதியாகவும், பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லாமலும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. சின்னச்சின்ன வாக்குவாதங்கள்தான் சில இடங்களில் நடந்தன. பெரிய சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.
வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடும் நன்றாக இருந்தது. மிகக் குறைவான இடங்களில் மட்டும் மாற்று எந்திரங்கள் வைக்கப்பட்டன. சில இடங்களில் பழுது பார்த்து சரி செய்யப்பட்டன.
தேர்தல் புறக்கணிப்பு செய்யப்பட்டது பற்றி சற்று ஆழமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும். அதற்கான சூழ்நிலை எது என்பதை கண்டறிய வேண்டும். வாக்காளர்கள், அனைத்து அரசியல் கட்சிகள், அரசு ஊழியர்கள் நன்றாக ஒத்துழைத்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்னும் 6 கட்டத்தேர்தல் ஜூன் 1-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதன் பிறகு ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. எனவே தேர்தல் முடிவுக்காக தமிழக மக்கள் 45 நாட்கள் காத்திருக்க வேண்டும்.