பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்போம்.. அசாம் முதல்-மந்திரி பிரசாரம்
|நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவுடன் இணைக்கப்படும் என ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசினார்.
ராம்கர்:
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவுடன் இணைக்கப்படும். 2019-ல் நடந்த தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றியபோது அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியது போல், 'ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி'கோவில் மற்றும் 'ஞானவாபி கோவில்' கட்டவும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தவும் பா.ஜ.க.வுக்கு இந்த தேர்தலில் 400 இடங்கள் தேவை.
அசாமைப் போலவே, வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள் ஜார்க்கண்டின் மக்கள்தொகை புள்ளிவிவரங்களை மாற்றுகிறார்கள். அதேசமயம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.