< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
Congress President Mallikarjuna Kharge
நாடாளுமன்ற தேர்தல்-2024

தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி 421 முறை பிரிவினை கருத்துக்களை பேசியுள்ளார் - கார்கே கடும் தாக்கு

தினத்தந்தி
|
30 May 2024 12:34 PM GMT

மோடி அரசுக்கு மற்றொரு முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்தால் அது ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வரும் என கார்கே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்டங்களுக்காக தேர்தல் நிறைவடைந்த நிலையில் ஏழாவது மற்றும் இறுதி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடம் ஓய்வடைகிறது. இந்த இறுதி கட்டத்திற்காக தேர்தல் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

"தேர்தல் பிரசாரங்களில் பிரதமர் மோடி 421 முறை கோவில்-மசூதி, பிரிவினை பற்றி பேசியுள்ளார். கடந்த 15 நாட்களில் மட்டும் காங்கிரஸ் பெயரை 232 முறையும், தனது பெயரை 758 முறையும் பேசியுள்ளார். ஆனால், நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து பிரதமர் ஒரு முறை கூட பேசவில்லை. நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் கவனம் சென்று விடாமல், மக்கள் திசை திருப்ப பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் முயற்சித்து வருகின்றனர்.

ஜூன் 4ம் தேதி மாற்று அரசை அமைப்பதற்கான அதிகாரத்தை மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியா கூட்டணி முழுப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மற்றொரு முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்தால் அது ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வரும்." இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, தேர்தல் பிரசாரத்தில் பிரிவினையை தூண்டும் வகையிலும், மதம் தொடர்பாகவும் கட்சி தலைவர்கள் பலர் வாக்கு சேகரித்த நிகழ்வு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோடீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்