சொத்து மறுபகிர்வு.. மோடியின் சர்ச்சை கருத்து: உண்மையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்வது என்ன?
|விகிதாச்சார உரிமைகள் என்ற தத்துவார்த்த கருத்தை ராகுல் காந்தி குறிப்பிட்டதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தொடர்பாக பிரதமர் மோடியின் விமர்சனம், சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், பெரும் விவாதப்பொருளாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது "இதற்கு முன்பு, அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று கூறினார்கள். அதாவது, இந்த சொத்து யாருக்கு பகிர்ந்தளிக்கப்படும்? அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு இது பகிர்ந்து அளிக்கப்படும், ஊடுருவல்காரர்களுக்கு வழங்கப்படும். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா?.
சகோதர, சகோதரிகளே, இந்த 'அர்பன் நக்சல்' எண்ணங்கள் உங்கள் தாலியைக்கூட விட்டு வைக்காது. அவர்கள் அந்த அளவுக்குகூட செல்வார்கள். தாய்மார்கள், சகோதரிகள் ஆகியோரிடம் இருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அதைப் பற்றிய தகவல்களைப் பெற்று, அந்த சொத்தை பங்கிட்டு கொடுப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது. இதற்கு முன்பு மன்மோகன் சிங் அரசு 'நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு' என்று சொன்னதைப்போல பகிர்ந்தளிப்பார்கள்" என்றார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி என்றும், தோல்வி பயத்தால் வெறுப்பு விதைகளை விதைப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர்.
ஆனால், காங்கிரஸ் கட்சி கடந்த 5-ம் தேதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மோடி கூறியபோன்று எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று தேடியபோது, நேரடியாக யாருடைய சொத்தையும் பறித்து யாருக்கும் கொடுப்பதாக கூறப்படவில்லை.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், சமூக நீதி மற்றும் சமத்துவம் என்ற கருப்பொருளில், வாக்குறுதிகளை வழங்கி உள்ளது. நாட்டில் உள்ள சாதிகள், துணை சாதிகள் மற்றும் அவர்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை கணக்கிடுவதற்கு சமூக-பொருளாதார மற்றும் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பட்டியலினத்தவர்(எஸ்.சி.), பழங்குடியினர் (எஸ்.டி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓ.பி.சி.) இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றம் விதித்த 50 சதவீத வரம்பை நீக்குவதற்கான அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படும் என்றும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசும்போது, "ஓ.பி.சி., எஸ்.சி, எஸ்.டி. மற்றும் சிறுபான்மையினர் எத்தனை பேர் என்பதை முதலில் நாடு தழுவிய அளவில் சாதிவாரியாக கணக்கெடுப்பை நடத்துவோம். அதன்பிறகு, செல்வத்தின் பகிர்வை உறுதி செய்வதற்கு, வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையாக, நிதி மற்றும் நிறுவன ரீதியாக கணக்கெடுப்பை நடத்துவோம். இந்த இரண்டு கணக்கெடுப்புகளுக்குப் பிறகு, தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு உரிய பங்கை வழங்க புரட்சிகரமான நடவடிக்கைகளை எடுப்போம். இது நாட்டின் தலையெழுத்தை மாற்றும்" என்றார்.
சாதிவாரி ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான ராகுல் காந்தியின் கருத்து மற்றும் சொத்து மறுபங்கீட்டுக்கான கணக்கெடுப்புகள் பெரும் விவாதத்தை எழுப்பி உள்ளது. ராகுல் காந்தியின் இந்த திட்டம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என சிலர் கேள்விகளை முன்வைத்தனர்.
ஆனால் இது போன்ற வாதங்களை கேலிக்குரியது என்று கூறி நிராகரித்துள்ளார் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழுவின் முக்கிய உறுப்பினரான பிரவீன் சக்கரவர்த்தி.
இதுதொடர்பாக பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:-
விகிதாச்சார உரிமைகள் என்ற தத்துவார்த்த கருத்தை ராகுல் காந்தி குறிப்பிடுகிறார். 48 பக்க தேர்தல் அறிக்கையில் எந்த இடத்திலும், ஒருவருடைய சொத்துகளை பறித்துவிட்டு வேறு ஒருவருக்கு கொடுப்போம் என்று காங்கிரஸ் கட்சி குறிப்பிடவில்லை. அப்படி சொல்வதுகூட வினோதமாக இருக்கிறது. நாங்கள் யாருடைய வீட்டிற்குள்ளும் நுழைய விரும்பவில்லை. அத்தகைய செயலை பா.ஜ.க.தான் செய்கிறது.
தங்களின் அடையாளத்தின்படி வெகுமதிகள் மற்றும் நன்மைகள் பெறக்கூடிய சமூகத்தை நாம் விரும்ப வேண்டாமா? என்பதுதான் ராகுல் காந்தியின் கேள்வி. அதுபற்றி நாம் இப்போது முறையான விவாதம் நடத்தலாம். இது கற்பனாவாதமா இல்லையா?, மிகவும் லட்சியவாதமா அல்லது நடைமுறை சார்ந்ததா? அதைப் பெறமுடியும் என ராகுல் காந்தி நம்புகிறார். அது, ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து அவர்களின் செல்வத்தைப் பறிப்பது என்று அர்த்தமல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி மீதான விமர்சனத்தை தனது அடுத்தடுத்த பிரசார கூட்டங்களிலும் முன்வைக்கிறார் பிரதமர் மோடி.
இன்று டோங் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, "உங்களின் செல்வத்தைப் பறித்து குறிப்பிட்ட மக்களிடையே விநியோகிக்க காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நாட்டு மக்கள் முன் வைத்துள்ளேன். இது காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியை மிகவும் ஆத்திரமடைய செய்துள்ளது. அவர்கள் எல்லா இடங்களிலும் மோடியை திட்டத் தொடங்கியுள்ளனர்." என்றார்.