< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
திருமண வரவேற்பிதழில் பிரதமர் மோடியின் பெயர்; சிக்கலில் மணமகன்
நாடாளுமன்ற தேர்தல்-2024

திருமண வரவேற்பிதழில் பிரதமர் மோடியின் பெயர்; சிக்கலில் மணமகன்

தினத்தந்தி
|
30 April 2024 8:55 AM IST

பிரதமர் மோடி மற்றும் நாட்டின் மீது கொண்ட அன்பால் அந்த வரியானது, திருமண வரவேற்பிதழில் அச்சடிக்கப்பட்டது என மணமகன் விளக்கம் அளித்திருக்கிறார்.

பெங்களூரு,

பிரதமர் மோடி மற்றும் நாட்டின் மீது கொண்ட அன்பால் அந்த வரியானது, திருமண வரவேற்பிதழில் அச்சடிக்கப்பட்டது என மணமகன் விளக்கம் அளித்திருக்கிறார்.

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு உட்பட்ட புத்தூர் தாலுகாவை சேர்ந்த உப்பினங்கடி காவல் துறைக்கு புகார் ஒன்று வந்துள்ளது. இதில், சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட மணமகன் ஒருவர் தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு எதிராக நடந்து கொண்டார் என சர்ச்சையாகி உள்ளது.

திருமணத்திற்கு அச்சடித்த வரவேற்பிதழில் மணமகன் ஒரு வரியை சேர்த்திருக்கிறார். அதில், பிரதமர் மோடியை மீண்டும் தேர்ந்தெடுப்பதே தம்பதிக்கு நீங்கள் அளிக்கும் சிறந்த பரிசாக இருக்கும் என இடம் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திடம் மணமகனின் உறவினரே புகாராக இதனை கொண்டு சென்றிருக்கிறார்.

இதனையடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் மணமகனின் வீட்டுக்கு நேரில் சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே, மார்ச் 1-ந்தேதி திருமண வரவேற்பிதழ் அச்சடிக்கப்பட்டது. அந்த வரியானது, பிரதமர் மோடி மற்றும் நாட்டின் மீது கொண்ட அன்பால் சேர்க்கப்பட்டது என விளக்கம் அளித்திருக்கிறார்.

அந்நபருக்கு கடந்த 18-ந்தேதி திருமணம் நடந்துள்ளது. அவர் விளக்கம் அளித்தபோதும், கடந்த 26-ந்தேதி போலீசில் தேர்தல் ஆணையம் புகார் ஒன்றை அளித்தது. இதனை தொடர்ந்து எப்.ஐ.ஆர். ஒன்று பதிவு செய்யப்பட்டது.

திருமண வரவேற்பிதழை அச்சடித்த உரிமையாளரிடமும் தேர்தல் ஆணையம் மற்றும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திருமணம் முடிந்த சில நாட்களில் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கும், போலீசாரின் விசாரணைக்கும் மணமகன் சென்று வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் செய்திகள்