'வாரணாசியில் பிரதமர் மோடி 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்' - அன்புமணி ராமதாஸ்
|வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை ,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கனவே 2 முறை வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதமர் மோடி, 3-வது முறையாக அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் வாரணாசியில் பிரதமர் மோடி 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"பிரதமர் மோடி வாரணாசியில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதோடு, இந்தியாவின் பிரதமராக 3-வது முறை மோடி பதவியேற்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. எங்கள் கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். எங்கள் வெற்றி உறுதியானது. பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா விரைவில் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும்."
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.