< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
பிரதமர் மோடி பொய்களை மட்டுமே பேசுகிறார் - மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்கு

கோப்புப்படம்

நாடாளுமன்ற தேர்தல்-2024

பிரதமர் மோடி பொய்களை மட்டுமே பேசுகிறார் - மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்கு

தினத்தந்தி
|
30 April 2024 5:15 AM IST

கர்நாடகத்தில் தங்கள் கட்சியின் ஆட்சி ஏற்கனவே 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தியுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் 2-வது கட்ட நாடாளுமன்ற தேர்தல் வருகிற 7-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வடகர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளில் கொளுத்தும் வெயிலில் தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். கலபுரகி தொகுதிக்கு உட்பட்ட சேடம் நகரில் நேற்று காங்கிரஸ் கட்சியின் தோ்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார்.

இதில் பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் என்னை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து பேசுகிறார். எங்களை குறை சொல்வதற்கு பதிலாக கர்நாடகத்திற்கு பிரதமர் மோடி என்ன செய்துள்ளார் என்று சொன்னால் நன்றாக இருக்கும். கல்யாண-கர்நாடகா பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நாடாளுமன்றத்தில் 330 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது.

நான் அனைத்து உறுப்பினர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆதரவு பெற்றேன். அவர்களின் ஒத்துழைப்பால் இந்த பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்தது. மத்திய பல்கலைக்கழகம், இ.எஸ்.ஐ. மருத்துவமனை, ஜவுளி பூங்கா, ரெயில்வே பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்டவற்றை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த பகுதிக்கு கொண்டு வந்தோம்.

இத்தகைய திட்டங்களில் ஏதாவது ஒன்றை பிரதமர் மோடி கொடுத்தாரா?. கர்நாடகத்தில் எங்கள் கட்சியின் ஆட்சி ஏற்கனவே 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மேலும் 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த ராகுல் காந்தி நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்தி முடித்தார். இதன் மூலம் மக்களின் பிரச்சினைகளை அவர் அறிந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகள் என்ன செய்தது என்று மோடி கேட்கிறார். பிரதமராக இருந்த நேரு ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் கொண்டு வராமல் இருந்திருந்தால் இன்று மோடி பிரதமராக இருந்திருக்க முடியாது. பிரதமர் மோடி பொய்களை மட்டுமே பேசுகிறார். காங்கிரசின் தேர்தல் அறிக்கையை அவர் கடுமையாக விமர்சிக்கிறார்.

பெண்களின் தாலியை காங்கிரஸ் பறித்துக் கொள்ளும் என்று பொய் பேசுகிறார். மக்களின் சொத்துக்களை பிடுங்கி சிறுபான்மையினருக்கு பகிர்ந்தளிக்க காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் பொய் பேசி வருகிறார்" என்று அவர் பேசினார்.

மேலும் செய்திகள்