< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
சாதி, மதத்தின் பெயரால் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு
நாடாளுமன்ற தேர்தல்-2024

சாதி, மதத்தின் பெயரால் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு

தினத்தந்தி
|
7 April 2024 10:13 AM IST

முதல்-அமைச்சர் ரங்கசாமி பா.ஜ.க.வின் கைக்கூலியாக செயல்படுகிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் 'இந்தியா' கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. மீண்டும் போட்டியிடுகிறார். அங்கு தி.மு.க. தலைவரும் தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மாநிலங்களை மாநகராட்சிகள் போல, புதுச்சேரியை கிராம பஞ்சாயத்து போல மத்திய பாஜக அரசு நடத்தி வருகிறது; இதற்கு புதுச்சேரி முதல்-அமைச்சரும் துணை போகிறார். மாநில உரிமை மட்டுமல்லாமல், யூனியன் பிரதேசங்களுக்கான உரிமைக்காகவும் இந்தியா கூட்டணி போராடுகிறது.

கவர்னர்களால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டுமல்ல, பா.ஜ.க. கூட்டணி ஆளும் மாநிலங்களிலும் பிரச்சினைதான். தமிழ்நாட்டு கவர்னரிடம் நாங்கள் மாட்டி முழித்துக் கொண்டிருக்கிறோம். காவல்துறையில் பதிவிக்காலம் முடிந்ததும் அவர்களுக்கு கவர்னர் பதவி வழங்கி, பா.ஜ.க.வின் ஏஜெண்டுகளாக மாற்றி, அவர்களை விளம்பரத்துக்காக பயன்படுத்துகின்றனர்.

ஒட்டுமொத்தமாக அனைவரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் அஜெண்டா, அதனால் தான் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரவில்லை. கோவில் நகரம் திட்டத்தின்கீழ் காரைக்கால் மேம்படுத்தப்படும். காரைக்காலில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். புதுச்சேரியில் முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும். புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும்.

பிரதமர் மோடி மதம், சாதியின் பெயரால் பிரசாரம் செய்கிறார். பிரதமர் மோடி சமூகநீதி, இடஒதுக்கீடு குறித்து பேச மறுக்கிறார். சமூகநீதி, இடஒதுக்கீட்டை பாதுகாப்பேன் என பிரதமர் மோடி ஒருநாளும் சொல்லவில்லை. மக்களுக்காக ஆட்சி நடத்தாமல், கார்ப்பரேட்களுக்காக பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார்.

புதுச்சேரியில் கவர்னராக அமர்ந்துகொண்டு தமிழ்நாட்டு அரசியலை தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்; இப்போது மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். முதல்-அமைச்சர் ரங்கசாமியை தங்கள் பேச்சை கேட்கச் சொல்லி பா.ஜ.க. பாடாய் படுத்துகிறார்கள். ரங்கசாமியை டம்மியாக அமரவைத்துவிட்டு பா.ஜ.க. பம்மாத்து ஆட்சியை நடத்துகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பா.ஜ.க.வின் கைக்கூலியாக செயல்படுகிறார். பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்