< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
சென்னையில் பிரதமர் மோடி: குவியும் தொண்டர்கள்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
நாடாளுமன்ற தேர்தல்-2024

சென்னையில் பிரதமர் மோடி: குவியும் தொண்டர்கள்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தினத்தந்தி
|
9 April 2024 5:45 PM IST

மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக பா.ஜ.க. தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

சென்னை,

பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி, 7-வது முறையாக இன்று தமிழகம் வருகிறார். இதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, இன்று மாலை 6 மணிக்கு சென்னை வருகை தருகிறார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தியாகராய நகர் பனகல் பூங்கா பகுதிக்கு செல்கிறார். அங்கு, பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்கிறார். 2 கிலோ மீட்டர் வரையிலான இந்த பேரணியின்போது சாலையின் இருபுறங்களிலும் மோடிக்கு பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக பாஜக தொண்டர்கள் இப்போதே குவிந்து வருகின்றனர்.

இதற்கிடையே, பிரதமர் மோடியின் வாகன பேரணி நடைபெறும் பனகல் சாலை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பார்வையாளர்களின் உடமைகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே சாலையின் உள்ளே வர அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடியின் வாகன பேரணி நடைபெறுவதையொட்டி சென்னை ஜி.எஸ்.டி. சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு, 100 அடி சாலை, அண்ணாசாலை, எஸ்.வி. படேல், காந்தி மண்டபம் சாலை மற்றும் தியாகராய நகர் ஆகிய இடங்களில் இன்று பிற்பகல் 3 முதல் இரவு 8 மணி வரை லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்