< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
10 ஆண்டுகளாக ஊழல் இல்லாத தலைவர் பிரதமர் மோடி - ராதிகா சரத்குமார் பிரசாரம்
நாடாளுமன்ற தேர்தல்-2024

10 ஆண்டுகளாக ஊழல் இல்லாத தலைவர் பிரதமர் மோடி - ராதிகா சரத்குமார் பிரசாரம்

தினத்தந்தி
|
10 April 2024 12:41 PM IST

உங்கள் பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றத்தில் சிம்ம குரலாக ஒலிக்க என்னை வெற்றி பெற செய்யுங்கள் என பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா கேட்டுக்கொண்டார்.

விருதுநகர்,

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கனுடன் கிராமப்புறங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர். விருதுநகர் அய்யனார் நகரில் பிரசாரத்தை தொடங்கிய ராதிகா அங்கு குடிசைப் பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அவர் பல்வேறு கிராம பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் கூறியதாவது

பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக ஊழல் இல்லாத தலைவராக ஆட்சி செய்து உள்ளார். மூன்றாவதாகவும் அவர்தான் பிரதமராக வர உள்ளார். எதிர்க்கட்சிகள் யாரிடம் போய் முறையிட முடியும். அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணியில் யார் பிரதமர் என்று கூற முடியவில்லை இங்கும் எதிர்கட்சியாக உள்ளனர்.

நான் இருக்கிற இடத்தில் ஒரு பாலமாக செயல்படுவேன். நாடாளுமன்றத்தில் உங்கள் பிரச்சனைகளுக்காக சிம்ம குரலாக போராடுவேன். ஏற்கனவே இங்கு 10 ஆண்டுகாலம் எம்.பி., யாக இருந்தவர் உங்கள் குறைகளை தீர்க்கவில்லை.

அரசின் திட்டங்கள் கூட உங்களை வந்து சேர நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மூன்றாவதாகவும் ஓட்டு கேட்டு வருகிறார் எனவே உங்களுக்காக உழைக்க தாமரை சின்னத்தில் வாக்களித்து என்னைவெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை தொடர்ந்து பேசிய சரத்குமார்,

6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பட்டாசு தொழிலாளர், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரின் பிரச்சினைகளைப் பற்றி நன்கு அறிந்த ராதிகாவுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்