< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
சாம் பிட்ரோடா கருத்து.. மரணத்திற்கு பிறகும் மக்களிடம் கொள்ளையடிக்க விரும்புகிறார்கள்: காங்கிரசை சாடிய மோடி
நாடாளுமன்ற தேர்தல்-2024

சாம் பிட்ரோடா கருத்து.. மரணத்திற்கு பிறகும் மக்களிடம் கொள்ளையடிக்க விரும்புகிறார்கள்: காங்கிரசை சாடிய மோடி

தினத்தந்தி
|
24 April 2024 1:53 PM IST

நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், காங்கிரஸ் பறித்துவிடும் என மோடி குறிப்பிட்டார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, சாதிவாரி கணக்கெடுப்பு, பொருளாதார ரீதியிலான ஆய்வு தொடர்பாக ராகுல் காந்தி கூறிய கருத்து பேசுபொருளாகி உள்ளது. மக்களின் சொத்துக்களை அபகரித்து குறிப்பிட்ட சிலருக்கு வழங்க காங்கிரஸ் நினைப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். ஊடுருவல்காரர்களுக்கும், அதிக பிள்ளைகள் பெற்றவர்களுக்கும் வழங்குவார்கள் என்று கடுமையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார். மோடியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்து அடுத்த புயலை கிளப்பியிருக்கிறது.

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு சாம் பிட்ரோடா அளித்த பேட்டியில், சொத்து மறுபங்கீடு தொடர்பான கருத்தை ஆதரித்ததோடு, சில அமெரிக்க மாநிலங்களில் நடைமுறையில் உள்ள 'பரம்பரை வரி' என்ற கருத்தை மேற்கோள் காட்டி அந்த கொள்கையை இந்தியாவில் கொண்டு வருவது குறித்து விவாதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

சாம் பிட்ரோடாவின் இந்த கருத்தை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. இந்தியாவை அழிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் அமித் மாளவியா கூறியிருந்தார்.

இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் சுர்குஜா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, சாம் பிட்ரோடாவின் கருத்தை மேற்கோள் காட்டி காங்கிரசை சாடினார்.

"இளவரசர் மற்றும் அரச குடும்பத்தின் ஆலோசகர் (சாம் பிட்ரோடா), நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். பரம்பரை வரி விதிக்கப்போவதாக காங்கிரஸ் கூறுகிறது. பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட பரம்பரை சொத்து மீதும் வரி விதிக்கும். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், காங்கிரஸ் பறித்துவிடும்" என மோடி குறிப்பிட்டார்.

எல்.ஐ.சி.யின் 'வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும்' என்ற முழக்கத்தைப் போன்று, மக்களிடம் வாழும்போதும் இறந்தபின்னரும் கொள்ளையடிக்க காங்கிரசிடம் ஒரு மந்திரம் உள்ளது, என்றும் மோடி விமர்சனம் செய்தார்.

பரம்பரை வரி என்பது, ஒரு தனி நபர் தனது மூதாதையர் சொத்தில் இருந்து ஈட்டப்படும் வருமானத்தின் மீது விதிக்கப்படும் ஒரு வகை வரியாகும். ஒரு தனிநபர் மறைந்தபிறகு, அவரது சொத்துக்களை முழுமையாக வாரிசுகள் பெற முடியாது. சொத்துக்களின் குறிப்பிட்ட பகுதி அரசாங்கத்திற்கு சென்றுவிடும். அது மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்