தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்: விமானி படுகாயம்
|தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது.
இதையடுத்து, வரும் 7, 13, 20, 25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 19 மற்றும் 26ம் தேதிகளில் 2 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. வரும் 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 13 மற்றும் 20ம் தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. 7ம் தேதி 3ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அம்மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான சுஷ்மா ஆதிரா ராய்கட் தொகுதியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். அவர் ஹெலிகாப்டரில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
இதற்காக தனியார் நிறுவனத்திடமிருந்து வாடகைக்கு ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார். சுஷ்மாவை ஏற்றிச்செல்வதற்காக இன்று காலை மஹட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இறங்கு தலத்திற்கு ஹெலிகாப்டர் வந்தது.
அப்போது, ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி படுகாயமடைந்தார். இதையடுத்து, விமானியை மீட்ட அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.