< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
5-வது கட்ட தேர்தல்: ரேபரேலி, அமேதி உள்பட 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
நாடாளுமன்ற தேர்தல்-2024

5-வது கட்ட தேர்தல்: ரேபரேலி, அமேதி உள்பட 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

தினத்தந்தி
|
20 May 2024 4:09 AM IST

இன்று நடைபெற உள்ள 5-வது கட்ட தேர்தலில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், ராகுல்காந்தி உள்பட 695 பேர் போட்டியிடுகிறார்கள்.

புதுடெல்லி,

543 உறுப்பினர்களை கொண்ட இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. உலகமே எதிர்பார்க்கும் இந்த தேர்தலில் முதல் 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இதன் மூலம் 379 தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவடைந்து உள்ளது. இதில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வான குஜராத்தின் சூரத் தொகுதியும் அடங்கும்.

இதுவரை நடந்த 4 கட்ட தேர்தல்களின் மூலம் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்து விட்டது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென் இந்திய மாநிலங்கள் முக்கியமானவை ஆகும்.

4 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 5-வது கட்டமாக 49 தொகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்தவகையில் உத்தரபிரதேசம் (14 தொகுதிகள்), மராட்டியம் (13), மேற்கு வங்காளம் (7), பீகார் (5), ஒடிசா (5), ஜார்கண்ட் (3), ஜம்மு-காஷ்மீர் (1), லடாக் (1) ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த தேர்தல் நடக்கிறது.இதற்காக மேற்படி தொகுதிகளில் கடந்த சில வாரங்களாக தீவிர பிரசாரம் நடந்தது. மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணியினரின் இந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது. நாட்டின் கிழக்கு, மேற்கு, வடக்கு என மூன்று திசைகளிலும் பரவியுள்ள இந்த 49 தொகுதிகளில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர்.

இதில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், பியூஸ்கோயல், ஸ்மிரிதி இரானி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர். மேலும் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் ஆகிய வாரிசுகளும் நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.

அமைதியான மற்றும் சுதந்திரமான வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், இந்த வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.

ஏற்கனவே நடந்த 4 கட்ட தேர்தல்களில் மொத்தம் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அடுத்தடுத்த கட்டங்களில் வாக்கு சதவீதத்தை மேலும் அதிகரிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. உத்தரபிரதேசத்தின் 14 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறும் நிலையில் அங்குள்ள ரேபரேலி, அமேதி தொகுதிகள் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளன.

இதைப்போல ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ மற்றும் அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதி மீதும் அரசியல் நோக்கர்களின் பார்வை திரும்பி இருக்கிறது. இந்த தொகுதியில் ஹாட்ரிக் வெற்றிக்காக களமிறங்கி இருக்கும் பா.ஜனதா எம்.பி. லல்லு சிங், சமாஜ்வாடி எம்.எல்.ஏ. அவதேஷ் பிரசாத்தை எதிர்கொள்கிறார்.

இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் முதல்கட்டமாக 28 தொகுதிகளுக்கு கடந்த 13-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

2-ம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் முதல்-மந்திரியும், ஆளும் பிஜு ஜனதாதள தலைவருமான நவீன் பட்நாயக் முக்கிய வேட்பாளர் ஆவார். மேலும் மாநில மந்திரிகள் சிலரின் அரசியல் எதிர்காலமும் இந்த தேர்தலில் நிர்ணயிக்கப்படுகிறது.

இதைப்போல ஜார்கண்ட் மாநிலம் கண்டே சட்டசபை தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் சிறையில் இருக்கும் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் களமிறங்கி இருப்பதால் தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது. 5-ம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்தந்த மாநில போலீசாருடன் இணைந்து மத்திய பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இன்று தேர்தல் நடைபெறும் 49 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. மீதமுள்ள 115 இடங்களுக்கு 6 மற்றும் 7-வது கட்டங்களில் தேர்தல் நடக்கிறது. அது முறையே வருகிற 25 மற்றும் ஜூன் 1-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த 7 கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மேலும் செய்திகள்