மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு: ஒரு வாரத்தில் முடிவு - ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி
|மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.
சென்னை,
மக்களவை தேர்தலின்போது மாணிக்கம் தாகூர் தரப்பு பணப்பட்டுவாடா செய்ததாக மதுரையை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி சசிகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தொடர்பாக, பா.ஜ.க. நிர்வாகி தாக்கல் செய்த மனுவில், "மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரும், அவரது முகவர்களும், அவரது கூட்டணி கட்சியினரும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தனர்.
பணப்பட்டுவாடா தொடர்பாக மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர்கள் மீது விருதுநகர் மற்றும் மதுரை போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கு செய்யப்பட்ட பின்பும் கூட வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் விதிகளை மீறிய அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மனு மீது எடுக்கப்படவில்லை. எனவே, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவின் அடிப்படையில் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மகாதேவன், சபீக் அடங்கிய அமர்வு முன் இன்று (ஏப்.25) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மனுதாரர் கொடுத்த கோரிக்கை மனு ஏற்கனவே பரிசீலனையில் உள்ளது. ஒரு வாரத்தில் அந்த மனு மீது முடிவெடுக்கப்படும்." என்று தெரிவித்தார்.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் பா.ஜ.க. நிர்வாகி தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.