காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை களங்கப்படுத்துகிறார் பிரதமர் மோடி - ப.சிதம்பரம்
|காங்கிரசின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி முழுமையாக படிக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ராஜஸ்தானில் கடந்த 21ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தாக்கியும், இஸ்லாமியர்கள் குறித்து தெரிவித்த கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. அதற்கு காங்கிரஸ், இந்தியா கூட்டணி கட்சிகள் பரவலாக எதிர்வினையாற்றி வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று (புதன்கிழமை) சிம்லாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் ஆதரித்த கருத்துகளை, மோடியால் சுட்டிக்காட்ட முடியுமா?. அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர்கள் மற்றும் ஏழைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கான நீதி வழங்கும் திட்டங்கள் காங்கிரஸ் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
காங்கிரசின் தேர்தல் அறிக்கை, தமிழகத்தின் தொலைதூர கிராமங்களை கூட சென்றடைந்துள்ளது. அதோடு நாடு முழுவதும் பேசு பொருளாகவும் மாறியுள்ளது. ஆனால் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை 2 மணி நேரத்தில் சுவடு தெரியாமல் காணாமல் போனது. அதில் எதுவும் இல்லை என்பதால் யாரும் அதைப்பற்றி பேசுவதில்லை.
மோடியின் கேரண்டி அரசியல் கட்சியின் அறிக்கையாக இருக்க முடியாது, எனவே அவர் காங்கிரஸ் அறிக்கையை பார்த்து பொறாமை கொள்கிறார். எனவே பிரதமர் மோடி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை களங்கப்படுத்துகிறார். முதலில் பிரதமர் மோடி, காங்கிரசின் தேர்தல் அறிக்கையை முழுமையாக படிக்குமாறு வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் கூறினார்.