< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்:  தொகுதி கண்ணோட்டம்- ஆரணி
நாடாளுமன்ற தேர்தல்-2024

நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- ஆரணி

தினத்தந்தி
|
30 March 2024 11:05 AM IST

ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி), விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டு நகரம் என்று அழைக்கப்படும் ஆரணி நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டு இதுவரை 3 தேர்தல்களை சந்தித்துள்ளது. தற்போது 4-வது தேர்தலை சந்திக்கிறது. இந்த தொகுதியில் போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி), விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன.

தந்தை- மகன் வெற்றி

தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்னர் 2009-ல் உருவாக்கப்பட்ட ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி 3,96,728 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் 2,89,898 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

பின்னர் 2014-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வக்கீல் செஞ்சி வி.ஏழுமலை 5,02,721 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அப்போதைய திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம் 2,58,877 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி 2,53,332 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும், தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 27,717 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பிடித்தனர்.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.கே.விஷ்ணுபிரசாத் 6,17,760 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் மீண்டும் போட்டியிட்ட செஞ்சி வி.ஏழுமலை 3,86,954 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

புதுமுகங்கள்

தற்போது நடைபெற இருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் புதுமுகங்கள் களம் காண்கின்றனர். தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், பா.ம.க. சார்பில் அ.கணேஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் கு.பாக்கியலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஆரணி தொகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு வன்னியர்கள் 40 சதவீதமும், முதலியார்கள் 27 சதவீதமும், ஆதிதிராவிடர்கள் 18 சதவீதமும், முஸ்லிம்்கள் 4 சதவீதமும் உள்ளனர்.

எதிர்பார்ப்பு

ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பட்டு சேலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பட்டு சேலைக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி உள்ளது. எனவே ஆரணி பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க பட்டு சேலை உற்பத்தியாளர்கள் 25 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளனர். இங்கு ஜவுளிபூங்கா அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

மேலும் இது நவீன அரிசி ஆலைகள், அரிசி உற்பத்தியாளர்கள் நிறைந்த தொகுதியாகும். எனவே நெல் அரிசி உற்பத்தி தொழில்பேட்டை அமைத்து, மத்திய, மாநில அரசு வழங்கக்கூடிய அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆரணி புதுகாமூர் பகுதியில் அமைந்துள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் சிவன் கோவில் ராமர் பிறப்பதற்கு காரணமான கோவிலாக கூறப்படுகிறது. இதனால் இங்கு தசரத சக்கரவர்த்திக்கு தனி சன்னதி உள்ளது. எனவே இந்த கோவிலை புதுப்பிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

அதேபோன்று வந்தவாசி பகுதியில் கோரைப்பாய் உற்பத்தி அதிக அளவில் நடக்கிறது. மத்திய, மாநில அரசுகள் கோரைப்பாய் தயாரிப்புக்கு மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக இருக்கிறது.

மயிலம் தொகுதியில் உள்ள தமிழ் புலவர்கள் கல்லூரியை உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்த வேண்டும். மயிலம் முருகர் கோவிலை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும்,செஞ்சி ராஜா தேசிங்கு கோட்டை சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகள் முழுமையாக நடைபெறவில்லை, பணிகளை விரைந்து முழுமையாக முடிக்க வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாக உள்ளது. போளூரில் ரெயில்வே மேம்பால பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போளூர் பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

போளூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு பலகோடி ரூபாய் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையாக உள்ளது. இதை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை வழங்கவில்லை. அதை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. போளூரை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், ஜவ்வாது மலையை மேம்படுத்தி சுற்றுலா தலமாக்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை போளூர் வரை நீட்டிக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

மேலும் செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும், அரசு வேளாண்மை கல்லூரி, மகளிர் கல்லூரி கொண்டு வரவேண்டும் என்பது செய்யாறு பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

பொதுமக்கள் சொல்வது என்ன?

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ள வந்தவாசி தனி தொகுதி கடந்த 50 ஆண்டுகளாகவே பின்தங்கிய நிலையில் எந்தவித முன்னேற்றமும் இன்றி இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இங்குள்ள புதிய பஸ்நிலையம் கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை பஸ்நிலையம் முழுமையாக இயங்கவில்லை. மாலை 6 மணிக்குமேல் இந்த பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வருவதில்லை. இரவில் மின் விளக்குகளும் எரிவதில்லை. இதனால் இருள் சூழ்ந்து பயணிகள் வருவதற்கு முடியாத நிலை இருந்து வருகிறது. வந்தவாசி அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் அவசர சிகிச்சைக்கு வருபவர்கள் செங்கல்பட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். எனவே மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும், பஸ் நிலையத்தை முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருக்கிறது.

இங்குள்ள சுகநதி ஒரு காலத்தில் மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு பயன்பட்டு வந்தது. தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறி விட்டது. இதனை தூர்வாரி படகு சவாரி விடவேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ. அம்பேத்குமார் சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

பாய் உற்பத்தி அதிகமாக நடைபெறுவதால் வந்தவாசியில் கோரை பாய் பூங்கா அமைக்கப்படும் என்று தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தார். அதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவு எப்படி?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து 2-வது முறையாக போட்டியிட்ட செஞ்சி ஏழுமலை தோல்வியடைந்தார்.

முதல் 4 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-

எம்.கே.விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்)............................6,17,760

வி.ஏழுமலை (அ.தி.மு.க.)............................................3,86,954

செந்தமிழன் (சுயேட்சை)..................................................46,383

ஏ.தமிழரசி (நாம் தமிழர் கட்சி)...........................................32,409

வெற்றி யார் கையில்?

ஆரணி நாடாளுமன்ற தொகுதி இதுவரை 3 தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் 2 முறை காங்கிரஸ் கட்சியும், ஒரு முறை அ.தி.மு.க.வும் வெற்றிபெற்றுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள போளூர், ஆரணி தொகுதிகளில் அ.தி.மு.க.வும், மயிலம் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும் வெற்றிபெற்றுள்ளது. செய்யாறு, வந்தவாசி, செஞ்சி ஆகிய தொகுதிகளில் தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது. எனவே சமநிலையில் இருந்த இந்த வெற்றியில் தற்போது பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியே வந்துவிட்டது. பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றுள்ளது.

2009-ல் நடந்த முதல் தேர்தலில் அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.கிருஷ்ணசாமியும், 2019-ல் நடந்த தேர்தலில் அவரது மகன் எம்.கே.விஷ்ணுபிரசாத்தும் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்றனர். 2014 தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் செஞ்சி ஏழுமலை வெற்றிபெற்றார்.

தற்போது நடைபெறும் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதால் நான்கு முனை போட்டி நிலவுகிறது. பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் தொகுதி பக்கமே வந்ததில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. அதனால் அவர் இந்த தேர்தலில் கடலூர் தொகுதிக்கு மாற்றப்பட்டு, ஆரணி தொகுதி முதல் முறையாக தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தி.மு.க.வினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதனால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாக்காளர்கள் விவரம்

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர்் பட்டியல் படி ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 7,31,824 ஆண் வாக்காளர்களும், 7,58,507 பெண் வாக்களர்களும், மூன்றாம் பாலினம் 109 பேர் என மொத்தம் 14,90,440 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

ஆரணி 2,76,930

செய்யாறு 2,60,491

போளூர் 2,41,676

வந்தவாசி (தனி) 2,44,113

செஞ்சி 2,54,442

மயிலம் 2,12,788

வேட்பாளர்கள் யார் யார்?

எம்.எஸ் தரணி வேந்தன் (தி.மு.க)

ஜி.வி.கஜேந்திரன் ( அ.தி.மு.க)

கணேஷ்குமார் (பா.ம.க)

கு.பாக்கியலட்சுமி ( நாம் தமிழர் கட்சி)

மேலும் செய்திகள்