நாடாளுமன்ற 3-வது கட்ட தேர்தல்: 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
|93 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற 3-வது கட்ட தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
சென்னை,
இந்தியாவில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மிகப்பெரிய கட்டமான இந்த தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்து விட்டது.
அடுத்ததாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் கேரளாவின் மொத்தமுள்ள 20 தொகுதிகளும், கர்நாடகாவின் 14 தொகுதிகளும் முக்கியமானவை.
இதைத்தொடர்ந்து 3-வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது. 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்குப்பதிவு நடக்கிறது. குஜராத் (25 தொகுதிகள்), கர்நாடகா (14), மராட்டியம் (11), உத்தரபிரதேசம் (10), மத்திய பிரதேசம் (9), சத்தீஷ்கார் (7), பீகார் (5), அசாம் (4), மேற்கு வங்காளம் (4), கோவா (2), தத்ரா-ஹவேலி-டையூ-டாமன் (2) என 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகள் வாக்குப்பதிவுக்கு தயாராகி வருகின்றன.
இதில் முக்கியமாக, குஜராத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. கர்நாடகாவில் ஏற்கனவே 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ள நிலையில், இன்றைய வாக்குப்பதிவுடன் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நிறைவுக்கு வருகிறது.
இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதாக இருந்த குஜராத்தின் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேநேரம் 2-வது கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற இருந்த மத்திய பிரதேசத்தின் பெதுல் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியின் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இன்றைய தேர்தலில் இந்த தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
3-வது கட்ட தேர்தல் நடைபெறும் 93 தொகுதிகளில் 1,300-க்கு மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் சுமார் 120 பேர் பெண்கள் ஆவர்.
இவர்களின் அரசியல் எதிர்காலம் இன்று நிர்ணயிக்கப்படுகிறது. இதற்காக மேற்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆயிரக்கணக்கில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த பின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன. அங்கு அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.