நாடாளுமன்ற மக்களவை தேர்தல்; 57 வேட்பாளர்கள் கொண்ட 3-வது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
|மேற்கு வங்காளத்தின் பெர்ஹாம்பூர் தொகுதியில் இருந்து காங்கிரசின் மூத்த தலைவர் மற்றும் அக்கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போட்டியிட உள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. மக்களவை தேர்தலை முன்னிட்டு, ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை தயாரித்து வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், 7 கட்ட மக்களவை தேர்தலில் இதுவரை 2 பட்டியல்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருந்தது. இதன்படி, 82 வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்து உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் 57 வேட்பாளர்கள் கொண்ட 3-வது பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்றிரவு வெளியிட்டது.
இதன்படி, அருணாசல பிரதேசம், குஜராத், கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் போட்டியிட கூடிய வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதன்படி, மேற்கு வங்காளத்தின் பெர்ஹாம்பூர் தொகுதியில் இருந்து காங்கிரசின் மூத்த தலைவர் மற்றும் அக்கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போட்டியிடுவார். அவர் அந்த தொகுதியில் இருந்து இந்த முறை மீண்டும் போட்டியிடுகிறார்.
புதுச்சேரியில் இருந்து காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இதனை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.