நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க.வுக்கு கருணாஸ் ஆதரவு
|தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
சென்னை,
தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சியான தி.மு.க. முழு வீச்சில் தயாராகி உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
இது குறித்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பா.ஜ.க. எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த அடிமை அ.தி.மு.க.வை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த நாடாளுமன்றத் தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும். மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம் மாண்புற மக்கள் ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியை காக்க 'இந்தியா கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் தி.மு.கவை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது.
இனி மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்திய பெருமுதலாளிகளின் கையில் கார்ப்ரேட்டின் கொள்ளைக் கூடாரமாகிவிடும். கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றிட, தமிழ்நாட்டில் அடிமை துரோகக் கட்சியான அ.தி.முக வை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும்.
தி.மு.க.விற்கு பல்வேறு தோழமைக் கட்சிகள் தமது ஆதரவை தெரிவிக்கும் அதே வேளையில் பலம் வாய்ந்த இக் கூட்டணியை 40 இடங்களிலும் வெற்றிப்பெற செய்ய திமு.க.விற்கு எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். மக்கள் விரோத சனாதன சக்திகளை விரட்ட, அடிமை துரோக அ.தி.மு.க.வை வீழ்த்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.