நாடாளுமன்ற தேர்தல் வெற்றி; பிரதமர் மோடிக்கு சீனா வாழ்த்து
|இந்தியா, சீனா ஆகிய இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என சீனா தெரிவித்து உள்ளது.
பீஜிங்,
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்தது.
ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என இரு பெரும் தேசிய கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை முழு விவரங்கள் இன்று வெளிவந்தன.
இதன்படி, நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ.க. 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால், ஆட்சியமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாகவே பெற்றுள்ளது. எனினும், தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.
காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், வருகிற 8-ந்தேதி பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், சீனாவின் வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவோ நிங் இன்று கூறும்போது, இந்தியாவின் பொது தேர்தல் முடிவுகளை நாங்கள் கவனித்திருக்கிறோம். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வெற்றிக்காக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம் என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, இரு நாடுகள் மற்றும் நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது.
நம்முடைய இரு நாட்டு உறவுகளின் ஒட்டுமொத்த நலன்களை மனதில் கொண்டும் மற்றும் வருங்கால நலனை கவனத்தில் கொண்டும் மற்றும் இருதரப்பு உறவுகளை நிலையான பாதையில் முன்னேற்றி கொண்டு செல்வதற்காகவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
2020-ம் ஆண்டு மே 5-ந்தேதி கிழக்கு லடாக் எல்லை பகுதியில் பாங்காங் சோ (ஏரி) பகுதியில் இரு நாடுகளின் வீரர்கள் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலால், இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதன்பின்னர், இரு நாடுகளின் தளபதிகள் மட்டத்தில் இரு தரப்பிலும், ஒரு சுமுக தீர்வு காண்பதற்காக, 21 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன.