< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
மேற்குவங்காளத்தில் பாயும் புலி யார்? - அனல் பறக்கும் அரசியல் களம்
நாடாளுமன்ற தேர்தல்-2024

மேற்குவங்காளத்தில் பாயும் புலி யார்? - அனல் பறக்கும் அரசியல் களம்

தினத்தந்தி
|
8 April 2024 1:43 PM IST

மேற்குவங்காளத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

கொல்கத்தா,

வங்கத்து புலிகள் வாழும் இந்த மாநிலத்துக்கு, மேற்குவங்காளம் என்ற பெயரே தனி கம்பீரத்தை கொடுக்கிறது. மேற்குவங்காளத்தில் துர்கை, காளி அம்மன் வழிபாட்டு தலங்கள் மிகவும் பிரபலமாகும் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மேற்குவங்காளம் மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவின் 4-வது பெரிய மாநிலமாகும். இங்குள்ள மக்கள் தொகை 10 கோடியே 25 லட்சத்து 52 ஆயிரத்து 787 ஆகும். மேற்குவங்காளத்தின் தலைநகர் கொல்கத்தா. இது மிகப்பழமை வாய்ந்த நகரம் ஆகும்.

அதிரடிக்கு பெயர்போன மேற்குவங்காளத்தில் 7 கட்ட தேர்தல்

மேற்குவங்காள மாநில அரசியல் என்பது எப்போதும் அதிரடி அரசியலாகவே இருக்கும். எந்த தேர்தல் நடைபெற்றாலும் அது இந்தியாவையே திரும்பி பார்க்கவைக்கும் வகையில் இருக்கும். மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதான எதிர்க்கட்சியாக பா.ஜ.க. உள்ளது. மேற்குவங்காளத்தில் மொத்தம் 42 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

கம்யூனிஸ்டுகளின் கோட்டை

உழைக்கும் வர்க்கமான தொழிலாளர்கள் நிறைந்த இந்த மாநிலத்தில், ஒரு காலத்தில் கம்யூனிஸ்டு சித்தாந்தங்கள் பரவி இருந்தது. இதன் காரணமாக கம்யூனிஸ்டு கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்தது. மேற்கு வங்காளம் என்றாலே கம்யூனிஸ்டுகளின் கோட்டை என்றே சொல்லலாம்.

பிரதமர் பதவியை மறுத்த ஜோதிபாசு

மேற்குவங்காளத்தில் சுமார் 34 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி கட்சிகளின் கூட்டணியே ஆட்சிக்கட்டிலில் இருந்தது. வங்காளத்தின் முகமாக அறியப்பட்ட ஜோதிபாசு கடந்த 1977-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டுவரை தொடர்ச்சியாக 23 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்தார்.

1996-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு 13 நாட்களில் கவிழ்ந்தது. அப்போது, மாநில கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி அரசை அமைத்தபோது, பிரதமர் பதவிக்கு ஜோதிபாசு பெயரை பரிந்துரைத்தன. ஆனால் அவரோ பிரதமர் பதவியை மறுத்துவிட்டார்.

பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் தாமாக முன்வந்து பதவி விலகினார். அவருக்கு பதில் புதிய முதல்-மந்திரியாக தனது சீடரான புத்ததேவ் பட்டாச்சார்யாவை தேர்வு செய்யுமாறு பரிந்துரைத்தார்.

கம்யூனிஸ்டு கட்சியில் உயர்மட்ட குழுவான பொலிட் பீரோ அதற்கு ஒப்பதல் கொடுத்ததால், புத்ததேவ் பட்டாச்சார்யா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவர் 2011-ம் ஆண்டு வரை முதல்-மந்திரியாக இருந்தார்.

போராட்டத்தால் செல்வாக்குபெற்ற மம்தா

கம்யூனிஸ்டு கட்சியின் கோட்டையாக இருந்த மேற்குவங்காளத்தில் காங்கிரஸ் பாரம்பரியத்தில் அரசியல் நடத்திக்கொண்டு இருந்தவர் மம்தா பானர்ஜி. ஒரு கட்டத்தில் காங்கிரசுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகிய மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார்.

2006-ம் ஆண்டு மேற்குவங்காளத்தில் தொழிற்சாலைகளுக்காக நிலத்தை கையகப்படுத்துவதற்காக புத்ததேவ் பட்டாச்சார்யா அரசு எடுத்த முயற்சி, மாநிலத்தில் பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தியது. சிங்கூர், நந்திகிராம் பகுதியில் பெரிய போராட்டம் வெடித்தது. இதுவே அரசுக்கு பெரிய சரிவை ஏற்படுத்த காரணமாக இருந்தது.

இந்த போராட்டங்களில் மம்தா பானர்ஜி தீவிரமாக களமிறங்கினார். இதன் மூலம் மம்தா மக்கள் செல்வாக்கை தன்பக்கம் திருப்பினார்.

கம்யூனிஸ்டுகளின் கோட்டையை தகர்த்த மம்தா

இந்த போராட்ட சூடு தணியும் முன் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வந்தது. அதில் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். அந்த தேர்தலில் அவர் அமைத்த கூட்டணி 294 இடங்களை கைப்பற்றியது. மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அந்த தேர்தலில் 63 இடங்களை மட்டுமே இடதுமுன்னணி பிடித்தது. முதல்-மந்திரியாக இருந்த புத்ததேவ் பட்டாச்சார்யாவும் தோல்வியடைந்தார். மேற்கு வங்க பெண் புலியான மம்தாவின் இந்த பாய்ச்சலால், 34 ஆண்டு கம்யூனிஸ்டு கோட்டை தகர்ந்தது. அதன் பிறகு மெல்ல...மெல்ல அங்கு கம்யூனிஸ்டு கட்சியின் பலம் குறைந்துவிட்டது.

கட்சி வெற்றி-மம்தா தோல்வி

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும், பா.ஜ.க. 18 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதே நேரம் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது. இருந்தபோதிலும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார். தனது கட்சியில் இருந்து பிரிந்து பா.ஜ.க.வில் இணைந்த சுவேந்து அதிகாரியிடம் மம்தா தோல்வியடைந்தார்.

பின்னர் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற மம்தா பானர்ஜி, சில மாதங்கள் கழித்து பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்.

சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல் களம்

மம்தா பானர்ஜி, கடந்த காலங்களில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து இருந்தாலும் தற்போது பா.ஜ.க.வை கடுமையாக எதிர்த்து வருகிறார். காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் இதர கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

இருப்பினும் இந்த நாடாளுமன்ற தேர்தலில், மேற்குவங்காளத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கரம் கோர்க்க விரும்பவில்லை. எனவே மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடுகிறது.

பா.ஜ.க.வை பொறுத்தவரை, மேற்குவங்காளத்தில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. பலம் வாய்ந்து இருந்த கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சிகளை பின்னுக்கு தள்ளி சட்டசபை தேர்தலில் 77 தொகுதிகளில் வெற்றிபெற்று பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த முறை எப்படியும் மேற்கு வங்காளத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற தீவிர களப்பணியாற்றி வருகிறது.

பா.ஜ.க. மாநில தலைவர் சுகந்தா மஜும்தார் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்த சுவேந்து அதிகாரி முழுவீச்சில் பணியாற்றி வருகிறார்கள். பிரதமர் மோடியும் அங்கு பல கட்ட பிரசாரங்களை செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கம்யூனிஸ்டு மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் களம் இறங்கியுள்ளது.

வாகை சூடுவது யார்?

நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றால், தேர்தலுக்கு பிந்தைய அரசியலில் தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்று மம்தா பானர்ஜி எதிர்பார்க்கிறார். அதேவேளை, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், மாநிலத்தில் தனது கட்சியின் எதிர்காலம் பாதிக்கும் என்றும் அவர் நினைக்கிறார். ஆகவே தனித்து போட்டியிடுகிறார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற விவகாரத்தில் எம்.பி. பதவியை இழந்த மகுவா மொய்த்ரா மற்றும் சினிமா, கிரிக்கெட் பிரபலங்களை திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களாக மம்தா ககளமிறக்கியுள்ளார்.

ஆனால் சந்தேஷ்காலியில் நடைபெற்ற கலவரம் அவருக்கு பெரிய தலைவலியை கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள பா.ஜ.க. அந்த பகுதியை சேர்ந்த பெண்ணையே வேட்பாளராக களமிறக்கியுள்ளது.

இந்த முறை எப்படியும் விட்டதை பிடிப்போம் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி சூளுரைத்துள்ளார். மும்முனை போட்டி ஏற்பட்டுள்ள மேற்கு வங்காளத்தில் பாயும் புலி யார்? என்பது ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரியவரும்.

மேலும் செய்திகள்