< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
குளுமையான கேரளாவில் அனல் பறக்கும் தேர்தல் களம்: கடவுளின் தேசத்தை கைப்பற்றப்போவது யார்?
நாடாளுமன்ற தேர்தல்-2024

குளுமையான கேரளாவில் அனல் பறக்கும் தேர்தல் களம்: கடவுளின் தேசத்தை கைப்பற்றப்போவது யார்?

தினத்தந்தி
|
3 April 2024 12:35 PM IST

குளுமை நிறைந்த கேரளாவில் தற்போது தேர்தல் களம் தகிக்கிறது.

திருவனந்தபுரம்,

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளா, 38,852 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. கிழக்கே மேற்கு தொடர்ச்சி மலைகளும், மேற்கில் அரபிக்கடலும் உள்ளது. இந்த மாநிலத்தின் தென்கிழக்கில் தமிழ்நாடும், வடகிழக்கில் கர்நாடகமும் எல்லைகளாக அமைந்துள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் கேரளத்தை, கடவுளின் தேசம் என்றே அழைக்கின்றனர். கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம் உள்ள மாநிலம் என்ற பெருமையும் இந்த கேரளத்துக்கு உண்டு.

தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட தகவலின்படி கேரளாவில் மொத்தம் 2 கோடியே 70 லட்சத்து 99 ஆயிரத்து 326 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 கோடியே 39 லட்சத்து 96 ஆயிரத்து 729 பேர் பெண்கள், 1 கோடியே 31 லட்சத்து 2 ஆயிரத்து 288 பேர் ஆண்கள் மற்றும் திருநங்கைகள் 309 பேரும் உள்ளனர்.

மொத்த மக்கள் தொகையில் 54.7 சதவீதம் பேர் இந்து மதத்தினர், 26.6 சதவீதம் பேர் இஸ்லாமிய மதத்தினர், 18.4 சதவீதம் பேர் கிறிஸ்தவ மதத்தினர் ஆவர்.

தேசிய கட்சிகளின் ஆதிக்கம்

கேரளாவில் மாநில கட்சிகளைவிட தேசிய கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் ஆதிக்கமே நீண்டகாலம் இருந்து வருகிறது. இந்த இரு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன.

பெரும்பாலும் சட்டமன்ற தேர்தலில் ஒரு முறை ஆட்சியை கொடுத்த கட்சிக்கு கேரள மக்கள் மறுமுறை ஆட்சி மகுடத்தை கொடுப்பதில்லை. ஆனால் தற்போதைய முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மட்டும் தொடர்ச்சியாக 2 முறை ஆட்சி பீடத்தை கொடுத்துள்ளனர்.

2016-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது முன்னணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பினராயி விஜயன் முதல்-மந்திரியானார்.

2016-ல் சட்டசபை தேர்தலில் வெற்றியை கொடுத்த கேரள மக்கள், 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 'கை' கொடுத்தனர். மொத்தம் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது.

ராகுல்காந்திக்கு கைகொடுத்த கேரளா

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் சொந்த தொகுதி உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி ஆகும். அவருடைய தந்தையும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதமரானார். ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.

சொந்த தொகுதியான அமேதியில் ராகுல்காந்தி தோல்வியடைந்தார். மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி வெற்றிபெற்றார். அதே நேரம் வயநாடு தொகுதி அவருக்கு ஆதரவு கரம் நீட்டியது. வயநாட்டில் ராகுல்காந்தி அமோக வெற்றி பெற்றார்.

எதிர் எதிர் துருவங்களாக இந்தியா கூட்டணி கட்சிகள்

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், தி.மு.க., ஆம் ஆத்மி, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்துள்ளன.

ஆனால் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் முக்கிய எதிரிகளாக உள்ளதால், இங்கு இந்தியா கூட்டணி அமையவில்லை. இரு கட்சிகளும் எதிர் எதிர் துருவங்களாக பிரிந்து போட்டியிடுகின்றன.

அதேவேளை, பா.ஜ.க.வும் களத்தில் உள்ளது. இந்த முறை கேரளாவில் தங்கள் கணக்கை எப்படியும் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க. வரிந்து கட்டி நிற்கின்றது.

களமிறங்கிய பிரபலங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது முன்னணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் உள்ளது. இந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பலம் வாய்ந்த வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி சைலஜா குறிப்பிடத்தக்கவர்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (எம்), புரட்சிகர சோசலிஸ்ட் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

காங்கிரஸ் கட்சியும் இந்த முறை தனது முக்கிய தலைவர்களை களம் இறக்கியுள்ளது. குறிப்பாக தற்போதைய எம்.பி.யான சசிதரூர், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால், முன்னாள் முதல்-மந்திரி கருணாகரனின் மகன் முரளிதரன் உள்ளிட்டோரை வேட்பாளராக அறிவித்துள்ளது. வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்த இருகட்சிகளுக்கு இணையாக பா.ஜனதாவும் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், நடிகர் சுரேஷ் கோபி, மாநில தலைவர் சுரேந்திரன், முன்னாள் முதல்-மந்திரி கருணாகரனின் மகள் பத்மஜா, முன்னாள் முதல்-மந்திரி ஏ,கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

3 பிரபலங்கள் மோதும் களம்

குறிப்பாக வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, மாநில பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் ஆகியோர் மோதுகின்றனர். அங்கு பிரசாரம் அனல் பறக்கிறது.

தேசிய அளவில் ஒரே கூட்டணியில் உள்ளவர்கள், இங்கு எதிர் துருவங்களாக போட்டியிடுவது, கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இதுபற்றி டி.ராஜா கூறும்போது, நமது பொது எதிரி பா.ஜ.க., ஆனால் அதை விடுத்து வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவது சரியில்லை என்றார்.

எது எப்படியோ பசுமையும், அழகும், குளுமையும் நிறைந்த கேரள மாநிலத்தில், தற்போதைய தேர்தல் களம் தகிக்கிறது.

மேலும் செய்திகள்